வங்குரோத்து அரசியல் வாதிகளே மோடியின் வருகையை குழப்ப நினைக்கின்றனர் வேலுகுமார்

வங்குரோத்து அரசியல் வாதிகளே மோடியின் வருகையை குழப்ப நினைக்கின்றனர். இலங்கை வாழ் மலையக இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் வலுப்படுத்தும் நிகழ்வே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயமாகும். இது கடந்த இரு வருடகாலத்தில் த.மு.கூயின் இராஜதந்திர நகர்வின் வெற்றியாகும் என்று த.மு.கூயின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், புஸல்லாவையில் நடைபெற்ற இந்திய பிரதமரின் வருகை தொடர்பான கலந்துரையாடலில் தெரிவித்தார்.

மலையக வரலாற்றில் இந்திய பிரதமர் ஒருவர் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு நேரடியாக உரையாற்றுகின்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஹட்டன் நோர்வூட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் உறுதிப்படுத்தும் செயற்பாடாகும். இது கடந்த இருவருட காலத்தில் த.மு.கூயின் இராஜதந்திர நகர்வின் வெற்றியாகும்.

இந்திய பிரதமரின் மலையக வருகை மலையக மக்களுக்கு மிக பெரிய கௌரவத்தை அளிக்கின்ற செயற்பாடாகும். மலையக மக்களென்றால் அவர்களுடைய உரிமைக்காக, பாதுகாப்பிற்காக மற்றும் நலன்களுக்காக குரல்கொடுக்க யார் இருக்கின்றார்கள் என்ற நிலைமை கடந்த காலத்தில் நிலவி வந்திருக்கின்றது. இந்திய வம்சாவளியினர் என்ற அடிப்படையில் இந்திய அரசால் பெற்றுக்கொடுக்கப்பட்ட பல்வேறு நல திட்டங்கள் உரியவாறு எமது மக்களை வந்துசேரவில்லை. கடந்த காலங்களில் இருந்த தலைவர்கள் இந்திய தூதரகங்களுக்கும் எமது மக்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியொன்றை ஏற்படுத்தியிருந்தனர்.

அதுமட்டுமின்றி எமது மலையக மக்களின் உண்மையான யதார்த்தமான நிலைமைகளை பற்றி கூட இந்திய அரசுக்கு எடுத்துக்கூற தவறியிருந்தனர். இந்திய பிரதமரின் கடந்த முறை இலங்கை விஜயத்தின்போது த.மு.கூயின் தலைமைகள் அவரை சந்தித்து உரையாடியது. அதன்போது இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்கள் தொரர்பாக விரிவாக பல விடயங்கள் இந்திய பிரதமருக்கு எடுத்து கூறப்பட்டது.

அதன் விளைவே இன்றைய இந்திய பிரதமரின் மலையக விஜயமாகும். இதனை எந்தவகையிலும் அரசியல் இலாபம் கருதி பயன்படுத்த வேண்டிய தேவை த.மு.கூக்கு கிடையாது. மொத்த மலையக மக்களினதும் கௌரவம் இதில் அடங்கியிருக்கின்றது. அதனை உச்சமாக பாதுகாக்கக்கூடிய வகையிலே இந் நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்நிகழ்வின் ஏற்பாடுகள் இலங்கை அரசால் உத்தியோக பூர்வமாக மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையிலே அமைச்சால் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ் ஏற்பாடுகளை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இது நாகரீகமற்ற, அரசியல் நடைமுறை தெரியாத நடத்தையாகும். இது மொத்தமாக பாதிக்கப்போவது மலையக மக்களின் சுய கௌரவத்தை ஆகும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]