அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள் தங்களுடன் மடிக்கணினிகளை கொண்டு வருவதற்கான தடையை நீட்டிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

பெரும்பாலும் எட்டு இஸ்லாமிய நாடுககளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கேபின்களில் மடிக்கணினிகளை வைத்துக்கொள்ள மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது. மடிக் கணினிகளில் குண்டுகளை மறைத்து வைக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது.
அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள், பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் மின்னணு உபகரணங்களை சோதிக்க 105 நாடுகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவை என்ற நிலையை உருவாக்கியுள்ளன.
விமான சேவை நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும், அல்லது அவ்விமானப் பயணிகளின் அனைத்து மின்னணு உபகரணங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்படும்.
அமெரிக்காவிற்குள் வருவதற்கு கூட அந்த விமான சேவை நிறுவனங்களுக்கு உரிமை மறுக்கப்படலாம்.

“ சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்; வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டு வருவது, விமான நிறுவனங்களில் பணி புரியும் ஆட்களையே பயன்படுத்துவது, மற்றும் விமானத்தை கடத்துவது போன்ற வேலைகளுக்காக புதிய வழி முறைகளை நமது எதிரிகள் கண்டுபிடிக்க தொடர்ந்து வேலை செய்கின்றனர்,” என்று புதன்கிழமை புதிய நடவடிக்கைகளை வெளியிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி தெரிவித்தார்.
”ஒவ்வொரு புதிய அச்சுறுத்தல் வரும்போதும் அதை தற்காலிகமான தீர்வுகளை கொண்டு நிறுத்துவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது. இதற்கு பதிலாக, பயணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, புதிய நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதை கடினமாக்கும் புதிய நடவடிக்கைகளையும் அமல்படுத்த வேண்டும்,” என்றார்.
இந்த புதிய நடவடிக்கைகள் மட்டுமே இறுதியாக இருக்காது என்று கூறிய கெல்லி வெளியிட்ட நடவடிக்கைகளில் இவையும் அடங்கும்:
பயணிகளை சோதனை செய்வதற்கன மேம்பட்ட வசதிகள்
தனிப்பட்ட மின்னணு சாதனங்களைக் கண்காணிக்கும் மேம்பட்ட வசதி
விமானம் மற்றும் பயணிகள் பகுதிகளில் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள் இந்த புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில், குறிப்பிட்ட நடவடிக்கைகளில் தெளிவற்ற நிலை உள்ளதாகவும், இது தினசரி 325,000 பயணிகளைச் சுமந்து செல்லும், சராசரியாக 2,100 விமானங்கள், 280 விமான நிலையங்களையும், 180 விமான சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மடிக்கணினி விவகாரத்தை பொறுத்தவரைக்கும் விமான சேவை நிறுவனங்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடலாம்; ஏனென்றால், இந்த புதிய நடவடிக்கைகள் அதிக பணம் செலுத்தி பயணிக்கும் வணிக வகுப்பு வாடிக்கையாளர்களை விமானப் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் என்ற அச்சங்கள் நிலவின.
கடந்த வாரம், பரவலான ஒரு தடையை ஆலோசித்துக்கொண்டிருப்பதாக, கெல்லி பாக்ஸ் நியூஸ்(Fox News) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது அச்சத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக, மடிக்கணினிக்கு தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த, விமான நிலையங்கள் கூட இந்த புதிய விதிகளுக்கு உட்பட்டால், அந்த தடை நீக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி, மொரோக்கோ, ஜோர்டான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் ஸ்மார்ட்போனை காட்டிலும் பெரிய சாதனங்களை விமானத்திற்குள் வைத்திருக்க தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.
இதே போன்ற விதிகளை ஐக்கிய ராஜ்ஜியம் ஆறு நாடுகளிலிருந்து செல்லும் விமானங்களுக்கு விதித்திருந்தது.
பெரிய மின்னணு பொருட்கள் விமானத்தின் சரக்கு கொண்டுசெல்லும் இடத்தில் வைக்கப்பட்டால், லித்தியம் பேட்டரி தீ பற்றும் ஆபத்து கூடுதலாக இருக்கும் என்று விமானப் பயண பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றி :BBC
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]