லாஸ் வேகஸ் தாக்குதல் – காரணம் இன்னும் மர்மமாகவே இருப்பதாக தெரிவிப்பு


லாஸ் வேகஸ், அமெரிக்காவின் லஸ் வேகஸ் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்துக்கான பிரதானம் காரணம் இன்னும் மர்மமாகவே இருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரெபன் பெடொக் என்பரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 58 பேர் பலியானதுடன், 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் நவீன வரலாற்றில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான துப்பாக்கித் தாக்குதல் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரியின் தோழி சுயவிருப்பத்தின் பேரில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த தாக்குதல் குறித்த எந்த தகவலையும் பெட்டொக் அவருக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

தாம் அவரை நேசித்ததாகவும், அவருடன் சிறந்த எதிர்காலம் ஒன்று குறித்த கனவில் இருந்ததாகவும், ஆனால் அன்பான அவர் இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபடுவார் என்பதற்கான எந்தவித ஐயமும் தமக்கு தோன்றி இருக்கவில்லை என்றும் பெடொக்கின் தோழி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் பெடொக், தமது தோழியுடன் உரையாடியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் அறிவித்துள்ளனர்.