லசந்த விக்கிரமதுங்க படுகொலை ; சந்தேகநபருக்கு இராஜதந்திரப் பதவி; நிராகரிக்கும் கோட்டா

லசந்த விக்கிரமதுங்க படுகொலை பிரதான சந்தேக நபருக்கு, இராஜதந்திரப் பதவியை வழங்கியதாக வெளியான செய்திகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள மேஜர் பண்டார புலத்வத்த, தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது அவருக்கு ஜேர்மனியில் தான் பதவி வழங்கப்பட்டது. அது இராஜதந்திரப் பதவி அல்ல. இரகசிய புலனாய்வு அதிகாரியாகவே அவர் ஜேர்மனியில் பணியாற்ற நியமிக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உள்ள நாடுகளில் இருக்கும் இலங்கை தூதுரகங்களில், இலங்கை இராணுவம் புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பது வழக்கமான நடைமுறை தான். 2005 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பிய நாடுகளில் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உதவி காவல்துறை கண்காணிப்பாளர் லதீப்கே, இத்தகைய பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது அதிகாரியாவார். அதற்குப் பின்னர் இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் இத்தகைய நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் பணியாற்ற அனுப்பப்பட்டனர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை

இப்போதும் கூட இது நடைமுறையில் உள்ளது. தூதரகங்களில் இளநிலைப் பதவிகளில் இருந்து இவர்கள் இரகசியப் புலனாய்வுப் பணிகளை மேற்கொள்வர். இவர்கள் பாதுகாப்பு ஆலோசகர்களாக அனுப்பப்படவில்லை.

2010ஆம் ஆண்டில் மேஜர் பண்டார புலத்வத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவில் செயற்பாட்டு நிலையில் இருந்தவர் என்பதால், அவருக்கு ஜேர்மனியில் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் அது இராணுவத்தின் முடிவாகவே இருக்கும்.

குறிப்பிட்ட நாடு ஒன்றுக்கு புலனாய்வு அதிகாரி ஒருவரை இராணுவம் அனுப்ப வேண்டும் என்றால், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக, பாதுகாப்பு செயலாளரின் கையெழுத்துடன் வெளிவிவகார அமைச்சுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.

மேஜர் புலத்வத்த ஏன் இந்தப் பணிக்குத் தெரிவுசெய்யப்பட்டார், ஏன் அவரது நியமனம் ரத்துச் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு இராணுவமே பதிலளிக்க வேண்டுமே தவிர பாதுகாப்பு அமைச்சு அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]