‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை, துப்பாக்கிச் சூட்டில் அல்ல தலையில் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டு மூளை சிதறியதாலேயே இடம்பெற்றுள்ளது என்று
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனையின்போது இது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, அரசின் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்திரவிதாரணவின் கீழ் செயற்பட்ட விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
லசந்த விக்கிரமதுங்க மாத்திரமன்றி, ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளையும் மேஜர் ஜெனரல் ஹெந்திரவிதாரணவின் தலைமையிலான குறித்த விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அக்காலப்பகுதியில் கொழும்புக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய இராணுவ மேஜர் ஜெனரலிடமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது என்று நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தெஹிவளை – அத்திட்டிய பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]