லசந்த விக்கிரமதுங்க கொலை : இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு கோட்டா இராஜதந்திரப் பதவி

லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேநபரான இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவியை வழங்கினார் என்று புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க கொலையுடனோ ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுடனோ தனக்குத் தொடர்பில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துவரும் நிலையில், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு அவர் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரப் பதவியைப் பெற்றுக் கொடுத்தமைக்கான புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

மேஜர் பண்டார புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியை பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இரண்டாவது செயலராக நியமிக்க கோட்டாபய பரிந்துரைத்திருந்தமைக்கான ஆதாரம் கிடைத்துள்ளது. 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கடிதத்தில், பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இரண்டாவது செயலராக இருந்த ஒரு அதிகாரியை திருப்பி அழைத்துவிட்டு, அந்தப் பதவிக்குப் புலனாய்வு அதிகாரியான மேஜர் புலத்வத்தவை நியமிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகாரச் செயலரிடம் கோரியிருந்தார்.

அந்தக் கடிதத்துடன் மேஜர் புலத்வத்தவின் சுயவிவரக்கோவையும் இணைக்கப்படவில்லை. வெளிவிவகார அமைச்சின் நியமன ஒழுங்குமுறைப்படியும், நுழைவிசைவு பெறுவதற்கும் சுயவிவரக்கோவை முக்கியமான போதிலும், அது இணைக்கப்படாமல் அவசரமாக அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதம் 2010, ஜனவரி 18ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவால் வழங்கப்பட்டது. இது உண்மையானது என்று பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய மேலதிக செயலர் ரவி அருந்தவநாதன் உறுதிசெய்திருந்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் ஆணையாளருடன் கலந்தாலோசிக்காமல் பொதுச்சேவை அதிகாரிகளை இடமாற்றம் செய்யமுடியாது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் மேஜர் புலத்வத்தவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில், அவ்வாறான ஒழுங்குமுறை கையாளப்பட்டிருக்கவில்லை.

லசந்த விக்கிரமதுங்க

எனினும், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டு, சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முடிவை மாற்றிக்கொண்டார். தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேஜர் புலத்வத்தவின் நியமனத்தை நிறுத்துமாறு வெளிவிவகாரச் செயலரை அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக மேஜர் புலத்வத்த கொழும்பில் இருக்கவேண்டியது அவசியம் என்பதால், அடுத்த அறிவிப்பு வரும்வரையில் அவர் புறப்பட்டுச் செல்வதை பிற்போடுமாறு அப்போதைய தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண வெளிவிவகாரச் செயலரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஒரு மாதம் கழித்து 2010 பெப்ரவரி 25ஆம் திகதி இந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

புலத்வத்தயின் நியமனத்தை நிறுத்திவைக்குமாறு வெளிவிவகாரச் செயலரிடம் கேட்டு சரியாக இரண்டு வாரங்கள் கழித்து. அவரை தாய்லாந்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண கோரியிருந்தார். எனினும், ஐந்து நாட்களின் பின்னர் நியமனத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களுக்கு இந்த அதிகாரி கொழும்பில் அவசியம் தேவைப்படுவதாக அதற்குக் காரணம் கூறியிருந்தார்.

லசந்த கொலை நடந்த இடத்திலும், ஏனைய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களின்போதும், மேஜர் புலத்வத்த இருந்தமைக்கான தொழில்நுட்பச் சான்றுகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் கிடைத்துள்ளன. அவரும், ஏனைய ஆறு புலனாய்வு அதிகாரிகளும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர்களான இராணுவ வொரன்ட் அதிகாரிகளான ஆர்.எல்.ராஜபக்ஷ மற்றும் உடலகம ஆகியோருக்கும் ஜேர்மனியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் எழுதுநர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]