லங்கா இ நியூஸ் ஆசிரியரை கைதுசெய்யுமாறு பிரித்தானியாவிடம் கோரிக்கை

லங்கா இ நியூஸ்

லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும், லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசை நேற்று பஜெட் வீதியில் உள்ள தமது இல்லத்துக்கு அழைத்த ஜனாதிபதி, அவருடன் நடத்திய சுமார் 30 நிமிடச் சந்திப்பின் போதே இவ்வாறு கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலர் சிறிலால் லக்திலக, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் பங்கேற்றதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த லங்கா இ நியூஸ் இணையத்தளம், கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் இலங்கையில் தடை செய்யப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்ட லங்கா இ நியூஸ், இலங்கைக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதால், அதன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]