லக்ஷ்மன் கிரியெல்லவிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சு ஒப்படைப்பு?

சட்டம், ஒழுங்கு அமைச்சை, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அண்மைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல ரத்நாயக்கவிடம் இருந்து சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க ஐதேக திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டு அரசாங்கத்துக்குள் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லக்ஷ்மன் கிரியெல்லவைத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை பொறுப்பேற்கத் தயாரா என்று கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்ஷ்மன் கிரியெல்ல ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் இருக்கிறார். எனவே அவருக்கு இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும் என்றும் ஐதேக தலைமை கருதுகிறது.

எனினும், இந்தத் திட்டத்துக்கு லக்ஷ்மன் கிரியெல்ல இன்னமும் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகினறது