தேசிய இறைவரிச் சட்டமூலம்மீது 6 ஆம் திகதியே வாக்கெடுப்பு

லக்ஷ்மன் கிரியல்ல

தேசிய இறைவரிச் சட்டமூலம் தொடர்பில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை விவாதம் நடத்தப்பட்டாலும் எதிர்வரும் 6 ஆம் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான பந்துல குணவர்தன,

“தேசிய இறைவரிச்சட்டம் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. திருத்தங்கள் எவை என்பதை அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே, இன்று அல்லது நாளை அவை எமக்கு கையளிக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சபைமுதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,

“தேசிய இறைவரிச் சட்டமூலம் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. 100 வரையான திருத்தங்கள் இருக்கின்றன. அவை பற்றி கதைப்பதற்கு பிறிதொரு தினம் வழங்கப்படும். 6 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளைமறுதினம் (நாளை) வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்படும்” – என்றார்.