மஹிந்த காலத்தில் அமீரலி அவரோடு கட்டிப்பிடித்து இருந்து இருந்தார்

அமீரலி மஹிந்த காலத்தில் அவரோடு கட்டிப்பிடித்து இருந்த வேளையில் கோறளைப்பற்று மத்திக்கு தனி பிரதேச சபையை கொண்டு வந்திருக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாழைச்சேனை பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாழைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

எமது கட்சியினை விட்டு சென்றவர்களுக்கு கதவு மூடப்பட்டுள்ளது. இவர்களுக்காக மீள திறக்கப்பட மாட்டாது. வாழைச்சேனையில் வாக்குகளை பெறுவதற்கு வழியில்லாமல் அமீர் அலி பிரதமரை அழைத்து வந்திருந்தார். வந்து கோறளைப்பற்று மத்திக்கு பிரதேச சபை தருவதாக தெரிவித்தார். எழுதிக் கொடுத்தால் சொல்லுவார் தான். நாங்கள் சாய்ந்தமருதில் சொல்லிப்படுகின்ற பாடு எங்களுக்குத்தான் தெரியும்.

இந்த விடயத்தினை அமீரலி மஹிந்த காலத்தில் அவரோடு கட்டிப்பிடித்து இருந்த வேளையில் செய்திருக்க வேண்டும். அப்போது தமிழ் மக்களை பற்றி கவலைப்படாமல் செய்து முடித்திருக்கலாம். மொரட்டுத்தனத்தில் மஹிந்த செய்திருப்பார்.

வாழைச்சேனை மக்கள் தனக்கு வாக்களிப்பதில்லை அவர்களின் தேவைகளை நான் ஏன் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர்கள் தற்போது வாழைச்சேனை முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை தமிழ் சகோதரர்கள் தான் வாக்களித்தார்கள் என்று கூறுகின்றவர்கள் உள்ளுராட்சி தேர்தலில் வாழைச்சேனை முஸ்லிம் மக்களின் வாக்குத் தேவை என்பதற்காக பிரதமரை கொண்டு வந்து தனியான பிரதேச சபை வழங்கப்படும் என்று கூறிச் சென்றுள்ளனர்.

முதலில் இழந்த கிராம சேகவர் பிரிவுகளை வர்த்தகமானியில் பிரசுரிக்க வேண்டும். இது நடக்காமல் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையை தரப்போறம் என்பதில் அர்த்தம் இல்லை.

முதலில் சபைக்கான நிலங்களை பிரகடணப்படுத்தி சபை பிரணகடணப்படுத்த வேண்டும். இதனை செய்யும் போது தமிழ் பகுதியில் இருந்து பிரச்சனைகள் வரும். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக நல்லுறவை பேணி வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி இதனை சாதித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை மக்கள் ஓட்டம் கட்ட வைக்கவுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் ஓட்டமாவடி வேட்பாளரின் அந்தஸ்தை பார்க்கின்ற பொழுது இவர்களின் கோட்டை சரிந்து விட்டது. இந்த மண்ணில் நடைபெற்ற அட்டூழியங்கள், அநியாயங்கள், உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கலாச்சாரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதற்கு முடிவு கட்ட மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

காணியை மீட்டுத் தருவதை விட்டுவிட்டு இருக்கின்ற காணியை பிடிப்பதில் இவர்களின் கவனம் போகின்றது. தங்களுக்கு காணி சேர்ப்பது எப்படி வாகரை தியாவட்டவான் பகுதிக்கு சென்றால் தெரியும். எங்கெல்லாம் வேலி கட்டி காணி பிடித்துள்ளார்கள் என்று தெரியும் என்றார்.