ரி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் 10ஆயிரங்கள் ஓட்டங்களை கடந்து வரலாற்று சாதனை

ரி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் 10ஆயிரங்கள் ஓட்டங்களை பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளார்.

ரி20 கிரிக்கட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் 10ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.

குஜராத் லயன்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலேயே இந்த மைல் கல்லை அவர் எட்டியுள்ளார்.

குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கெய்ல் 38 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களை விளாசி ரசிகர்களுக்கு வான வேடிக்கையை காட்டியிருந்தார்.

இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் மூன்று ஓட்டங்களை பெற்ற வேளையில் ரி20 போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்கள் என்ற சாதனை நிகழ்த்தினார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், சிக்சர் மன்னன் என்றும் அழைக்கப்படுகின்றார். ரி20 போட்டிகளின் முடிசூடா மன்னராக விளங்கும் கிறிஸ் கெய்ல் இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் 9937 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்நிலையிலேயே நேற்றை போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக அரங்கில் ரி20 கிரிக்கெட் போட்டிகள் இத்தகைய பிரசித்திக்கு கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்களே முக்கிய காரணமாகும்.

ஒருகாலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டையும் 50 ஓவர் ஒருநாள் போட்டிகளையும் கண்டுகளித்த ரசிகர்கள் ரி20 யின் வருகையால் கிரிக்கெட்டை மேலும் ரசிக்க தொடங்கினர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒரு காலத்தில் கால்பந்தாட்டம் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தமாகவிருந்தது. ஆனால், இன்று கிரிக்கெட்டுக்கு கால்பந்து போன்று முக்கியத்துவம் கொடும் காலம் உருவாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்த ரி20 போட்டிகள் தான்.

உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படும் சச்சின், லாரா போன்ற வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் 10 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், கிறிஸ் கெய்ல் ரி20யில் 10ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளமை என்பது ஒரு முக்கிய மைல்கல்தான். காரணம் 10 ஓட்ட இலக்கு ரி20யில் அடைய முடிய ஒரு இலக்க என்பது நிதர்சனம்.

இந்தச் சாதனையை எவர் முறியடிப்பார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.