ராஜித சேனாரட்னவின் கருத்தே விசேட மேல்நீதிமன்றம் சு.க எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்மோசடிகளை விசேட மேல்நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபித்து விசாரணை செய்வது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை கலந்துரையாடவில்லை என்று சமூக வலுவூட்டல், சமூர்தி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. கட்சி பிளவுப்படாமல் பாதுகாக்கும் எண்ணம் கொண்ட அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கட்சிக்கு வலுசேர்க்க வலுசேர்க்க வேண்டும்.

சர்வதேச ரீதியில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கையில் மூன்று தசாப்தகாலம் நிலவிய யுத்தத்தை முன்னாள் ஜனாதிபதி நிறைவுக்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். ஆனால், 2010ஆம் ஆண்டின் பின்னர் அவரின் குடும்ப ஆதிக்கம் காரணமாக கட்சி முதல் நாட்டின் ஜனநாயகம் வரை கேள்விக்கு உள்ளானது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைவிதிக்கும் அறிக்கை தயாரிக்கப்படுவதை இந்தியாவின் ஊடா \க அறிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ, முன்னதாக தேர்தலை நடத்தி இந்தியாவின் ஊடாக அமெரிக்காவிடம் பேசி ஐ.நா. விவகாரத்தில் இருந்து விடுப்படவே தேர்தலை நடத்தி தோல்விக்கண்டார்.

தோல்வியை அடுத்து கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் கொடுத்து விட்டு சிறிது நாட்களிலேயே கட்சியின் ஒரு பகுதியினரை உடைத்துகொண்டு சென்று தற்போது எவருக்கோ அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கப் பார்க்கிறார். கட்சியை பிளவுப்படுத்தும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. அதனாலேயே அவர்களுக்கு பூரண கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளார். 66ஆவது சு.கவின் மாநாட்டுக்கு அனைவரும் வலுச்சேர்க்க வேண்டும். அதுவே, கட்சிக்கும் நாட்டுகும் செய்யும் நன்மை.

இதன்போது நேற்றை அமைச்சரவைக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது,
அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியமை அவரின் தனிப்பட்ட கருத்தாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொருத்தமட்டில் அவ்வாறான கலந்துரையாடல் எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அரசமைப்பை மீறும் வகையில் எந்தவொரு செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அரசமைப்பின் பிரகாரமே செயற்பட முடியும் என்றார்.