ரஷ்யாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் ரகசிய பயணம்

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்தப் பயணம் தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல்கள் அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளை, இழுபறிக்குள்ளாகியிருக்கும், ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே, பாதுகாப்புச் செயலாளர், ரஷ்யா சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.