ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : சு.க. அமைச்சர்களும் கைவிரிக்கும் நிலை

வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டுஎதிரணி உறுப்பினர்கள் நேற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பிரதிசெயலாளர் நாயகத்திடம் குறித்த பிரேரணையை கையளித்த மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள், அது விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிகருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விநியோக மோசடி மற்றும் சொகுசு வீட்டு விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களை மையப்படுத்தியே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் கூட்டு எதிரணியின் 32 எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதை அவர் ஆய்வுக்குட்படுத்திய பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறச்செய்வார்.இந்த திகதியில்தான் அதை விவாதிக்கவேண்டுமென கட்டாயடிமெதுவும் இல்லை. அரசியல்காரணங்களுக்காக சிலவேளைகளில் இழுத்தடிப்புகள் இடம்பெறலாம்.

எனினும், 3 மாதங்களுக்குள் அதை விவாதத்துக்கு உட்படுத்தவேண்டும். அவ்வாறு இல்லையேல் புதிய நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவரவேண்டிய நிலையேற்படும்.

ரவிகருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது இதற்கு முன்னரும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர்.

அது 2016 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கூட்டுஎதிரணி உறுப்பினர்களும், ஜே.வி.பியினரும் பிரேரணைக்கு ஆதரவாகவும் (51) , அரச தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர் (145);. இதன்படி 94 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இம்முறை வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை பலப்பரீட்சையாகவே அமையுமென அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேசிய அரசிலுள்ள சு.கவின் சில உறுப்பினர்களும் கூட்டுஎதிரணியின் பிரேரணைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். தான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்பார் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். எனினும், இது விடயம் குறித்து கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தைக் கூட்டியே இவ்விருகட்சிகளும் முடிவெடுக்கவுள்ளன.

ஜனாதிபதியும் ரவியின் செயற்பாடுகள்மீது அதிருப்தியில் இருக்கின்றார் எனவும், இதனால்தான் நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் சுட்டிக்கர்டுகின்றனர். ஆகவே, குறித்த பிரேரணை ரவிக்கு பலபரீட்சையாகவே அமையுமென கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]