ரயில் முன் பாய்ந்து தந்தை மற்றும் இரு மகன்கள் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து தந்தை மற்றும் இரு மகன்கள் தற்கொலை

மட்டக்களப்பு – கொழும்பு விரைவுப் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்ததில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள போவத்த எனுமிடத்தில் திங்கட்கிழமை (10) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் போவத்த கிராமத்தைச் சேர்ந்த கதிரவேல் விஜயசூரிய (வயது 37) மற்றும் அவரது பிள்ளைகளான ரஞ்சித் சங்கரூபன் (வயது 12), விதர் சஞ்சித் (வயது 04) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் இரவு நேர விரைவுப் புகையிரதம் வெலிக்கந்தை – போவத்த எனுமிடத்தை ஊடறுத்துச் செல்லும்போது மேற்படி தந்தை தனது இரு பிள்ளைகளான சிறுவர்களையும் இரு கைகளிலும் பற்றிக் கொண்டு கும்மிருட்டான பகுதியில் வைத்து புகையிரதத்தின் முன்னால் பாய்ந்துள்ளார்.

அவ்வேளையில் தந்தையும் அவரது 04 வயதுச் சிறுவனம் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். 12 வயதுச் சிறுவன் குற்றுயிராகக் காணப்பட்ட நிலையில் அச்சிறுவன் புகையிரத அதிகாரிகளால் வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். எனினும் சிறுவனின் உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சடலங்கள் உடற்கூறாய்வுக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவி தன்னையும் பிள்ளைகளையும் பராமரிக்காது வேறொரு ஆணுடன் தொடர்பைப் பேணி வந்ததால் கணவன் நீண்ட நாட்களாக விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக பொலிஸாரின் முதற் கட்ட விசாரணையில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]