ரணிலை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த சுமந்திரன்

ஜெனிவாவில் தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்து விடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

‘எந்த தீர்மானத்திலும் காலக்கெடு இலங்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு காலத்துக்குள் இங்கே இந்த தீர்மானத்திலே இலங்கை தான் பொறுப்பெடுத்த விடயங்களை நிறைவேற்றுகின்ற போது அதனை மேற்பார்வை செய்வதற்கும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் உந்தி தள்ளுவதற்குமான பொறிமுறை தான் இந்த தீர்மானம். ஆகவே தான் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்போது முன்வைத்திருக்கின்ற தீர்மான வரைபே எம்மை பொறுத்த வரையில் போதாது. இது இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அதனை திருத்துவதற்கான பிரேரணையை கொண்டு வந்தால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறது.

பத்து வருடங்களாக நாம் சொல்லிவருகின்ற ஒரு கூற்று உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதாகும். அந்த உண்மையின் அடிப்படையிலேயே நீதி செய்யப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் திருத்தங்களை செய்யும் முயற்சியில் அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரேரணையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது என, ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து ஜெனிவாவிலுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில், இந்த விடயம் குறித்து பேசியுள்ளார். இதையடுத்து, உடனடியாக ஜெனிவா வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தாங்கள் பிரேரணையில் திருத்தத்தை கோரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]