ரணிலின் பதவி பறிப்பு, மகிந்தவுக்கு பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் விளக்கம்

ரணில் விக்கிரமசிங்கவுடனான முரண்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும், தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு என்பனவற்றினாலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க தான் முடிவெடுத்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க வீம்புக்கும், பிடிவாதமாகவும், கூட்டாக முடிவெடுப்பதை தவிர்த்தார். தனித்து முடிவுகளை எடுக்க முனைந்தார். இந்த அணுகுமுறை பல முரண்பாடுகளுக்கு இட்டுச் சென்றது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் கொள்கை முரண்பாடும் இருந்தது. கொள்கை வேறுபாடுகள் தவிர அவருக்கும் எனக்கும் கலாசார வேறுபாடுகளும் கூட இருந்தன.

என்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது.

இந்த அரசியல் பிரச்சினைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், என்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினாலும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுக்கும் மாற்றுத் தெரிவு ஒன்று மட்டுமே எனக்கு இருந்தது.

அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பொறுப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

எனது நியமனங்கள் அனைத்துமே அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும், சட்ட நிபுணர்களின் ஆலோசனைப் படியுமே மேற்கொள்ளப்பட்டன என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]