ரஜினி இலங்கைக்குச் செல்ல வேண்டாம் : திருமாவளவன் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினி ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இலங்கைக்குச் செல்ல வேண்டாம்
திருமாவளவன்

இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி, யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

விழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு வீடுகளை ரஜினிகாந்த் வழங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வுள்ளனர்.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்புடைய நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதால் இந்த நிகழ்ச்சி மீது அதிக கவனம் குவிந்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, இலங்கைக்குச் செல்லவேண்டாம். லைக்காவுடனான தனது நட்பைப் திரைப்படத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம். ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]