யோகேஸ்வரன் எம்பி உரை – தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள் தொகை அதிகரித்தால் எதிர்ப்போம்

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து தேசிய அரசாங்கம் அமைத்துக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால் அமைச்சர்களது எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு தமது கட்சி ஆதரவு வழங்க மாட்டாதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பொதுநல அமைப்புக்களுக்கு உபகரணக் கையளிப்பு நிகழ்வு செவ்வாய்கிழமை (12) பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது விளையாட்டுக்கழகங்கள், மாதர் அமைப்புக்கள் சமய ஸ்தலங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு விளையாட்டு உபகரணம், தளபாடம் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின்மூலம் இப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – தேசிய அரசாங்கம் அமைப்பதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. தற்போதுள்ள அமைச்சுக்களை வைத்துக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியையும் இணைத்து செயற்பட வேண்டும்.

தற்போது வரையப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பினை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் போதுமான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இல்லை. தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சிப் பிரதிநிதிகளும் இணைக்கப்படுவார்களாகவிருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடிய சூழல் ஏற்படும். தேசிய அரசாங்கம் வருமாகவிருந்தால் புதியாக கொண்டுவரப்படும் அரசியல் யாப்பினை நிறைவேற்ற முடியும்.

புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன அதனை பெரும்பான்மை சமூகம் ஏன் எதிர்க்க வேண்டும். உருவாக்கப்படும் அரசியல் யாப்பு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியது.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு சர்வதிகாரத் தன்மைகள் கொண்டது. ஆவை நீக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் சகல பிரஜைகளுக்கும் ஏற்ற வகையில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்ட வேண்டும் பாராமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது: என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]