யுத்த காலத்தில் இருந்த அரசியல் ஸ்திரத் தன்மையை விட தற்போது நாடு அதிக அரசியல் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது – நஸீர் அஹமட்

யுத்த காலத்தில் இருந்த அரசியல் ஸ்திரத் தன்மையை விட தற்போது நாடு அதிக அரசியல் சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சமகால அரசியல் கள நிலவரங்கள் சம்பந்தமாக விடுத்துள்ள அறிக்கையொன்றில் அவர் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை சிலாகித்து அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் இழுபறி நிலைமையால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடுமோ என்ற அச்ச நிலை வர்த்தக சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.

அபிவிருத்திகள் முடங்கியுள்ளன. உற்பத்திகள் நலிவடைந்து சென்று கொண்டிருக்கின்றன.முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளார்கள்.

இவை எல்லாவற்றையும் விட நாட்டு மக்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளார்கள். திட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள் அரசியல் அதிகாரம் எப்படியாகுமோ என்ற அச்சத்தில் பணிப்புரைகளை ஏற்று திட்டங்களை அமுல்படுத்தத் தயங்குகிறார்கள்.

ஆக ஒட்டு மொத்தத்தில் நாடு உற்பத்திகள் இ;ன்றியும், அபிவிருத்திகள் இன்றியும் உறைந்து போய் உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலுமுள்ளதுபோல் இந்த நாடும் சீரழிந்த இழுபறி அரசியலால் வங்குறோத்து நிலைக்குச் சென்றுவிடுமோ என்று பொருளாதார முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் தயங்குகிறார்கள்.

இத்தகைய சீரழிவான நிலைமைக்கு ஒரு தரப்பாரை மட்டும் குற்றஞ்சாட்டுவதை விட ஏதோவொரு வகையில் எல்லோருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அரசியல் ஏமாற்றுப் பேர்வழிகள், நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார தேர்தல் முறையின்படி நடாத்தி ஜனநாயக ஆட்சியை அவ்வப்போது உறுதிப்படுத்தியிருந்தால் மக்கள் நம்பிக்கை வீண்போயிருக்காது.

நிருவாக இயந்திரமும் இழுபறியின்றி இயங்கியிருக்கும்.

மாகாண சபைத் தேர்தல்களை தமது பேரினவாத சுயலாப அரசியலுக்காக பிற்போட்டதும் கலப்பு முறை என்ற கோதாவில் அதற்குள் சதித்திட்டங்களைப் புகுத்தியதும் நல்லாட்சியின் பங்காளர்களான ஜனாதிபதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவும் கையாண்ட துரோக அரசியல் சூட்சுமங்களாகும்.

சிறுபான்மைச் சமூகங்களை ஏமாற்றி அரசியல் நடாத்த ஏங்கும் பேரினவாதம் இன்னமும் இந்த நாட்டைச் சீரழிப்பதிலேயே முழுமூச்சாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது முடிவுக்கு வராதவரை இந்த நாட்டுக்கு எந்த விமோசனமும் கிட்டப்போவதில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]