யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் மிகக் குறைவு – கீர்த்தி தென்னக்கோன்

தேர்தல் வன்முறைகள்

யாழ்ப்பாணம்; நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக காணப்படுவதுடன், தேர்தல் வன்முறைகளும் யாழ்.மாவட்டத்தில் மிக குறைவாக காணப்படுவதாகவும், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாகவும் பெண்கள் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் செயலமர்வு இன்று (12) யாழ்.ஞானம்ஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தின் சனத்தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக காணப்படுகின்றது.

தேர்தல் நிலவரங்களை அடுத்த மாவட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வடமாகாணத்தில் அதிலும் யாழ். மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் மிகக்குறைவாக காணப்படுகின்றன.

கடந்தகாலத் தேர்தல்களின் போது, யாழ்.மாவட்டத்தில் அதிகளவான வன்முறைகள் இடம்பெற்றதை அவதானித்திருந்தோம். இராணுவத்தின் தலையீடு அதிகமாக காணப்படுகின்ற பிரதேசமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. ஆவ்வாறு அச்சுறுத்தல் இருந்த காலத்திலும் கூட நீதியான தேர்தலை நடாத்துவதற்கான வழியை அமைத்துக்கொடுத்திருக்கின்றோம்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, பொது மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வாக்காளர்களுக்கு விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டதாக வேறு மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வடமாகாணத்தில் இருந்து மிகவும் குறைவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இம்முறை தேர்தல் வன்முறைகள் யாழ்.மாவட்டத்தில் குறைவாக காணப்படுகின்றமையினால், அதற்குரிய கௌரவம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையே சென்றடைய வேண்டும்.
புதிய தேர்தல் முறையின் ஊடாக பல்வேறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமையினால், அவ்வாறு ஒவ்வொரு உறுப்பினர்களின் ஆலோசனைகளின் மூலம் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற போது, நிலையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதில் கபே அமைப்பிற்கு நம்பிக்கை உள்ளது.

சிவசேன அமைப்பிற்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது. வேறு எந்த கட்சிக்கும் எதிராக முறைப்பாடு கிடைக்கவில்லை. தென்னிலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் அரசியலமைப்பிற்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமென தெரிவித்துள்ளார்கள். புத்தள மாவட்டத்தில் 54 வீதமானவர்கள் பெண் வாக்காளர்களாக காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு எவருக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாதவாறு இந்த புதிய தேர்தல் முறைச் சட்டம் அமைந்துள்ளது. எனவே, இனவாதத்தினையும், மதவாதத்தினையும் உள்ளடக்காத தேர்தலாக இந்த தேர்தல் சட்டம் அமைக்கப்பட்டு, முழுக்க அபிவிருத்தி திட்டத்திற்குரிய தேர்தலாக அமைந்துள்ளதென்ற நம்பிக்கை இருப்பதகாவும அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]