யாழ்.மாநகர சபையின் தேர்தலிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

தேர்தல் விஞ்ஞாபனம்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான யாழ்.மாநகர சபையின் தேர்தலிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (22) வெளியிடப்பட்டது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் இன்று (22) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது.

சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ்.மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதில், ஏற்கனவே முன்மொழியப்பட்டு உலக வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் “யாழ். நகர் அபிவிருத்தி” திட்டத்தினை விரைவாகச் செயற்படுத்தி, சர்வதேச நகரங்களுக்கு நிகரான நகரமாக யாழ். நகரை மேம்படுத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

போருக்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கையின் 3ஆவது முன்னணி நகராகத் திகழ்ந்த எமது யாழ். மாநகர சபையை மீளவும் அதன் பெருமைமிகு நிலைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய அரசாங்கத்தினால் யாழ். நகர மத்தியில் அமைக்கப்பட்டு வரும் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

• மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களின் வீடமைப்பு, வாழ்வாதாரம் குறித்து உரிய முக்கியத்துவத்துடன் கவனம் செலுத்தப்படும்.

• செங்குந்தா, சத்திரத்தடி, காக்கைதீவு, நாவாந்துறை, கொழும்புத் துறை, குருநகர், சின்னக்கடை, பாசையூர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்து மக்களின் மேம்பட்ட நுகர்வுக்கு வழி செய்யப்படும்.

• கைத்தொழில், வணிக, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் குடியிருப்பு வலயங்கள் உருவாக்கப்படும்.

• நவீன சந்தை வர்த்தகர்களின் சகல நலன்களும் பேணப்படும்.

• மாநகரினுள் ஐந்து குடும்பங்களுக்கு மேல் வதிகின்ற அனைத்து வீதிகளும், ஒழுங்கைகளும் மறு சீரமைக்கப்பட்டு தார் அல்லது கொங்கிரீட் வீதிகளாகத் தரமுயர்த்தப்படும்.

• சிறுவர்கள், முதியோருக்கான பொழுது போக்கு மையங்களும், பூங்காக்களும் உருவாக்கப்படும்.

• மாநகர சபை எல்லையினுள், சகல வீதிகளுக்கும் இலங்கை மின்சார சபை ஒத்துழைப்புடன், மின் விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• துரையப்பா விளையாட்டரங்கு உட்பட்ட பொது விளையாட் டரங்குகளின் பாவனை குறித்த புதிய, பொது மக்களுக்கு வசதியான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.

• சர்வதேச தரங்களுக்கு அதி நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்படும்.

• சகல சனசமூக நிலையங்களினதும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் உதவு தொகைகளை வழங்கி, படிப்பகங்கள், முன்பள்ளிகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே இருக்கின்ற முன்பள்ளிகள், படிப்பகங்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதுடன், தொழிற்பயிற்சி மையம் ஒன்றினை நிறுவி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

• பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு போன்ற வாழ்வாதாரச் செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• மாநகரினுள் பொருத்தமான இடங்கள் அடையாளங்காணப்பட்டு புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே இருக்கின்ற அனைத்து சுற்றுலா மையங்களும் புதுப் பொலிவு பெற வழிவகுக்கப்படும்.

• தீயணைப்பு சேவைகள் மேம்படுத்தப்படும் எனப்பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இணைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆதரவாளர்கள் மத்தியில் விஞ்ஞாபனத்தினை வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டு நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களாக ஆர்.ஜெய்சேகரம், பா.கஜதீபன், ஆ.பரம்சோதி உட்பட மாநகர வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]