யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்- இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இருவருக்கு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் ஜயசூர்ய (வயது -26), சண்றுவான் (வயது – 26) ஆகிய இருவரே கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு தலையிலும் மற்றையவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாக நீண்ட நாள்களாக செயற்படுகின்றனர்.

ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார் என்று விசாரணையில் தெரிகிறது.

மோதலில் மேலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என கூறப்படும் அதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.