யாழ்.சங்குவேலிப் பகுதியில் முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை

யாழ்.சங்குவேலிப் பகுதியில் முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை.

யாழ்ப்பாணம் சங்குவேலிப் பகுதியில் நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஐவர், வீட்டாரை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான நகை பணம் என்பவற்றினைக் கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவத்தில் வீட்டு உரிமையாளரான எம் .சிவலிங்கம் வயது 75 மற்றும் அவரது மனைவி சி. இராசமலர் வயது 67 ஆகிய இருவர்மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சிவலிங்கத்தின் ஒர் கால் பலமாக தாக்கப்பட்டதனால் முறிவடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பருவ மழையை பயன்படுத்தி சங்குவேலிப் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்குள் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் முகமூடிக் கொள்ளையர்கள் ஐவர் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். இவ்வாறு புகுந்த கொள்ளையர் நகை பணம் என்பவற்றினை கோரியுள்ளனர். நகை பணத்தை வழங்க மறுத்த வீட்டாரை கட்டை பொல்லு என்பவற்றினால் பலமாக தாக்கியுள்ளனர். இதனால் வீட்டு உரிமையாளர்கள் இருவருமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் நகை பணம் என்பன இருக்கும் இடத்தை தெரிவிக்க மறுத்தமையினால் இருவர் வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தியவண்ணம் ஏனைய மூவரும் வீடு முழுமையாக சல்லடையிட்டு தேடுதல் நடாத்தியுள்ளனர். இதன்போது தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளிட்ட 17 பவுன் தங்க நகைகளும், கைத் தொலைபேசி, மடிக்கனணி, உட்பட சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிட்டுள்ளர்.

வீட்டிற்குள் புகுந்த ஐந்து கொள்ளையர்களும் முகத்தை கறுப்புத் துணிகளால் கட்டியிருந்த நிலையில் நகை பணத்தை கோரி தாக்கியபோதும் கூறத நிலையில் வீட்டின் உரிமையாளரான முதியவரின் கையை கத்தியால் வெட்டியுள்ளனர். இதன் பின்பே அனைத்து உடமைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்றதும் அயலவரின் உதவியுடன் இருவரும் தற்போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]