யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டிடம்

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டிடம் இன்று (23) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கட்டிடத்திறப்பு விழாவில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கட்டிடத் தொகுதியின் பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்ததுடன், நுழைவாயில் நாடாவினையும் சம்பிரதாயூர்வமாக வெட்டித்திறந்து வைத்தார்.

மத்திய அரசின் மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபா நிதியில் வடமாகாண சுகாதார அமைச்சினால் இந்த கட்டிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சர் க.குணசீலன், மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர் அ. பரம்சோதி மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், மற்றும் யாழ்.மாவட்ட சுகாதார பணிமனைப் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் உட்பட குருநகர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்.குருநகர் ஆதார வைத்தியசாலையில் நிலவி வந்த வெளிநோயாளர் பிரிவிற்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால், இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.