யாழ். குடாநாட்டில் பதற்றம் :2 நாட்களில் 25 இளைஞர்கள் கைது!!

யாழ். குடாநாட்டில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், ‘பீல்ட்பைக் குறூப்’ குவிக்கப்பட்டு வீதிச் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளினால் துன்னாலையிலும், கோண்டாவிலிலும் 25 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளினால் யாழ். குடாநாட்டில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. போர்க் காலச் சூழலைத் திரும்பவும் நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன.

துன்னாலையில் 13 பேர் கைது!

வடமராட்சி –  துன்னாலையில் நேற்றும் நேற்றுமுன்தினமும் முழுமையான சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது நேற்று 10 இளைஞர்களும், நேற்றுமுன்தினம் 3 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

120 இற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும், 80 இற்கும் மேற்பட்ட பொலிஸாரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களுடன் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ‘பீல்ட்பைக்’ குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முறையான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களும், ஹன்ரர் வாகனங்களும்   கைப்பற்றப்பட்டன. அவை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
கடந்த மாதம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்திலேயே 13 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 9ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  உயிரிழந்திருந்தார். இதனால் கொதிப்படைந்த துன்னாலை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் போராட்டம் நடத்தினர். சிறப்பு அதிரடிப்படையினர் மீதும், பொலிஸ் காவலரண்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 17 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோண்டாவிலில் 12 பேர் கைது! இதேவேளை, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது 12 இளைஞர்கள் திடீரெனக் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் சிலரிடம் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் வாகனம் ஒன்றில் பயணித்த அனைவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் மாலை முதல் திருநெல்வேலி, கொக்குவில், கோண்டாவில்  பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் திடீர் வீதிச் சோதனையில் ஈடுபட்டனர்.  திருநெல்வேலியில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் பணிபுரிந்துவிட்டு பயணித்தவர்களின் வாகனமும் கோண்டாவிலில் சோதனையிடப்பட்டது.
வாகனத்தில் இருந்தவர்களில் சிலரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதால் எல்லோருமே கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோப்பாய் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த இளைஞர்களை விசேட அதிரடிப்படையினரே கைதுசெய்தமையால்  அவர்களின் அறிக்கையின் பின்பே விடுவிக்க முடியும் எனக் கைவிரித்துவிட்டனர் என்று கூறப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]