யாழ்.குடாநாட்டில் தொடரும் கைது வேட்டையை உடன் நிறுத்துங்கள்

யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைது வேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இவ்வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும். அதன்போதும் இந்தக் கோரிக்கையை நாம் நேரில் விடுக்கவுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அடுத்த வாரம் அங்கு செல்லவுள்ளார்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 நாட்களுக்குள் 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சியில் மட்டும் 27 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகள் சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் பேசினேன். கைதுகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியமை, பொலிஸ் அதிகாரியின் வீடு மீது தாக்குதல் நடத்தியமை, விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களையே கைது செய்வதாக அவர் என்னிடம் கூறினார்.

இது பாதுகாப்புத் தரப்பினர் உங்களுக்குச் சொன்னது. நீங்கள் அங்கே நேரில் சென்று நிலைமையைப் பாருங்கள். அதுவரையாவது இந்தக் கைதுகளை நிறுத்துங்கள் என்று நான் சொன்னேன். அடுத்த வாரம் செல்வதாக அவர் எனக்குப் பதில் தந்தார். ஆனால், அதன் பின்னரும் கைதுகள் தொடர்கின்றன.

இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. இந்த நாட்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் யாழ்.குடாநாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளோம். அங்கு இளைஞர்களைக் குறிவைத்துத் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் வலியுறுத்தவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]