யாழ்.அரியாலை மணியம் தோட்டம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர்கள் அடையாளம் காணப்படவில்லை

யாழ்.அரியாலை மணியம் தோட்டம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர்கள் அடையாளம் காணப்படவில்லை

யாழ்.அரியாலை மணியம் தோட்டம்

யாழ்.அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை மணியம் தோட்டம் உதயபுரம் முதலாம் வட்டாரத்தில் 24 வயதுடைய டொன் மொஸ்கோ ரிக்டர் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில்இ விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அடையாள அணிவகுப்பிற்கும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தர பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த கட்டளையின் பிரகாரம் இன்று (16.11) யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட அத்துடன் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி பி.மோகனதாஸ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது இரு விஷேட அதிரடிப்படையினர் இருவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும் அடையாள அணிவகுப்பில் இரு விஷேட அதிரடிப்படையினரையும் சாட்சியான நிஷாந்தன் அடையாளம் காண்பித்திருக்கவில்லை. தொடர்ந்து வழக்கானது திறந்த மன்றில் விசாரணை செய்யப்பட்டிருந்தது.

விசாரணையின் போது குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக அறிக்கையொன்றை தாக்கல் செய்து மன்றில் குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோன்று பொலிஸாரும் இச் சம்பவம் தொடர்பில் இறந்தவரின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்தக்கறை மற்றும் இரத்த கறை படிந்த உடைகள் போன்றவற்றை இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மேலதிக அறிக்கையொன்றின் மூலம் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரனி அவர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் செய்திருந்த போதும அப் பிணை விண்ணப்பமானது மன்றினால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த இரு விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் அதுவரை வழக்கினை ஒத்திவைக்கவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸதரன் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]