யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமையை கவனத்தில் எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஆரசிய்ல கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுவரும் தமது வழக்குகளை வேறு பிரதேசத்திற்கு மாற்றுவதை கண்டித்தும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தம்மை தடுத்துவைப்பதை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒன்பது நாட்களாக சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரகின்றனர்.

இந்நிலையில் அவர்களது உறவினர்கள் மற்றம் பொது அமைப்பினர் இணைந்து இன்று இந்த கவனயீர்ப்பை மேற்கொண்டதுடன் எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முகவரியிடப்பட்ட தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தமிழரசு கட்சி நிர்வாக செயலாளர் குலநாயகத்திடம் அவர்கள் இன்று கையளித்தனர்.

கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில் எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் உரியவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு அவர்களின் உணவுதவிர்ப்பு போராட்டத்தினை முடிவிற்கு கொண்டுவருமாறு அவர்கள் கோரிக்கை விட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் தொடர்போராட்டங்களை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.