யாழில் “வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வு செயற்திட்டத் தொடக்க விழா

சமூக விழிப்புணர்வு

யாழில் “வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வு செயற்திட்டத் தொடக்க விழா

“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வு செயற்திட்ட தொடக்க விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (06) யாழில் ஆரம்பமாகியது.

வடகிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.

வடகிழக்கு மக்களாகிய நாங்கள் வன்முறை வாழ்வு தராது என்றும் போதை வாழ்வை அழிக்கும் என்றும் அறிந்திருக்கின்றோம். அந்த அறிவார்ந்த நம்பிக்கையின் மீது எமது சமூக சமய கலாசார பண்பாட்டு கட்டமைப்பையும் சந்ததியினரையும், எமது வாழ்வையும் மேம்படுத்த உறுதி பூணுகின்றோம்.

வன்முறையை, போதையை ஆதரிக்கும் எவரும் எமது மக்களின் மீதும் எமது எதிர்காலத்தின் மீதும் எவ்வித அக்கறையும் அற்றவர்கள் என்றும் எமது அழிவிற்கு துணை நிற்பவர்கள் என்றும் நம்புகின்றோம்.

அனைத்து பெற்றோரும் தாம் போதை மற்றும் வன்முறைகளில் இருந்து முற்றாக விலகியிருப்பதோடு தமது குழந்தைகள் இதுவிடயத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்பதை முழுமையாக உறுதிசெய்தல் அவசியமாகும். அவ்வாறு ஈடுபாடு காட்டுகின்ற பிள்ளைகளின் விடயத்தில் உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் அணுகுமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.

சமூக விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு

அனைத்து மதங்களும் போதைக்கும் வன்முறைக்கும் எதிரானவை. மதத்தலைவர்களும், மதகுருமார்களும், வணக்கஸ்தலங்களும் போதைக்கும் வன்முறைகளுக்கும் எதிரான போதனைகள் வழிகாட்டல்கள், விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் முன்னரைவிடவும் கூடுதல் முக்கியத்துவத்தோடு முன்னெடுத்தல் அவசியமாகும்.

போதைப்பொருள் பாவணையிலும், வன்முறைகளிலும் பரவலாக ஈடுபடுவோர் இளைஞர்கள் என்ற வகையில் இளைஞர்களுக்கான வழிப்புணர்வு நிகழ்வுள் மற்றும் இளைஞர்களை போதைப் பாவணையில் இருந்து வன்முறைகளிலிருந்தும் மீட்டெடுப்பதற்கு சமூக மட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் எமது மக்களின் நலன்பேணும் அனைத்து சமூகமட்ட அமைப்புகளும் தொடராக உழைப்பதற்கு முன்வரல் வேண்டும்.

வன்முறைக்கும் போதைக்கும் எதிராக மத்திய அரசு, மாகாண அரசு உள்ளுராட்சிகள் தற்போது காணப்படும் சட்டரீதியான பொறிமுறைகளினூடாக தமது மன்றங்களின் விசேட சட்ட மூலங்களினூடாகவும் நடவடிக்கை மேற்கொள்ள முன்வரல் அவசியமாகும்.

இந்த தீர்மானங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும், பெற்றோர் மதத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து போதைக்கும் வன்முறைக்கும் எதிரான விழிப்புணர்வு குழுக்களை அமைத்துச் செயற்பட வேண்டுமென்றும் இந்த செய்திட்ட நிகழ்வில் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், போதை முற்றாக ஒழியும்வரை, வன்முறை முற்றாக ஒழியும் வரை எமது பயணம் தொடரும் என்றும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உறுதிபூண்டனர்.

இந்த விழிப்புணர்வு செயற்திட்ட நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின் அயூப், கே.சயந்தன், சுகிர்தன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள் இளைஞர்கள் பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]