யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகள் கைது

பொருள் விற்பனையாளர் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன், நாரந்தனைப் பகுதிகளில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது.

இதையடுத்து மண்டைதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பொலிஸார் பலப்படுத்தினர்.

இந் நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற சந்தேகநபர்கள் இருவரும் வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றிருந்தனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் மண்டைதீவு பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர்.

இதனடிப்படையில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனையின் படி,

கொள்ளையடித்த நகைகள், பொருள்களுடன் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், விக்கிரகங்கள் இந்திய நாணயத்தாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]