யாழில் குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இருவரின் விளக்கமறியலை வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றயவர் சிசிரிவி காணொலிப் பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி வேறு நீதிமன்றில் முன்னிலையாவதால் இந்த மன்றில் முன்னிலையாக முடியவில்லை என்றும் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

அதனை ஆராய்ந்த மன்று சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து வழக்குகளை வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய இடங்களிலுள்ள 2 வீடுகளுக்கு புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

அத்துடன், வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே 100) கிராம அலுவலகரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை – அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

நான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவருக்கும் எதிராக தலா 2 வழக்குகள் வீதம் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா? என்று மன்று கேள்வி எழுப்பியிருந்தது.

“சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சிசிரிவி கமரா பதிவை இன்று வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், இன்றுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

“சந்தேகநபர்களில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நண்பருக்கு வழங்கியிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை வைத்துதான் அதன் உரிமையாளரான சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்தனர்” என்று அவரது சட்டத்தரணி மன்றுரைத்தார்.

மற்றைய சந்தேகநபர் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]