இன்று உலகில் வழங்குகின்ற மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. ஒவ்வொரு மொழியும் தமக்கே உரித்தான சில தனித்துவப் பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன. அவ்வகையில், தமிழ் மொழிக்கே உரித்தான தனித்துப் பா வடிவமான ‘சித்திரக் கவி’ பற்றிக் காண்போமா???

சித்திரக் கவி எனும் பெயரிலேயே அதன் பொருளும் உண்டு எனலாம். சித்திரம் என்பது ஓவியம், படம் என்பதைக் குறிக்கும், கவி என்பது கவிதை, பாடல், செய்யுள் என்பதைக் குறிக்கும். அவ்வகையில், சித்திரக் கவி என்பது சித்திரம் போன்று எழுதப்படும் பாடல் அல்லது சித்திர வடிவில் வரையப்படும் செய்யுள் ஆகும். இஃது, மிறைக்கவி, அருங்கவி எனும் வேறு பெயர்கள் பெற்றும் விளங்குகிறது.

சித்திரக் கவி
சித்திரக் கவி

சித்திரக் கவியானது சித்திர வடிவினுள் பொருள் நிறைந்த பாடலை வரைவது ஆகும். சித்திரக் கவி ஆசிரியன் தாம் விரும்பும் சித்திர வடிவைத் தேர்ந்தெடுத்து அதனுள் வார்த்தை ஜாலம் செய்வது இதுவாகும். சுருக்கமாக இதனை, ‘படமும் பாட்டும்’ எனச் சுட்டலாம். எழுத்துக்களைச் சித்திர வடிவத்தினுள் அங்கும் இங்கும் நிரை, நிரலாக இட்டு, பொருள் பொதிந்த பாடல்களை ஆக்கும் வித்தை இது எனலாம். பார்ப்பதற்கு ஓவியம் போன்றே விளங்கினாலும் இது ஒரு கவி வடிவம் ஆகும். சில கவிகள் ‘குறுக்கு எழுத்து’ போன்றும் காணப்படும். ஆனால் அத்தகையன அர்த்தம் நிறைந்த பாடல்களாகும்.சித்திரக் கவி

பல்வேறு உருவங்களின் வடிவில் வடிக்கப்படும் இச் சித்திரக் கவி பார்ப்பவரை மலைக்கச் செய்யும். பாம்பு, தேர், சதுரங்கம் எனக் கவிதை வடிப்பவர் தம் விருப்பத்திற்கு ஏற்ப பார்ப்பவரைக் கவரும் வகையில் கவிதை வடிப்பது மரபு. விந்தையும் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தும் கவி வடிவமான இது, இன்று பல தமிழர்களுக்கே தெரியாத அல்லது புத்தகத்தில் மட்டுமே வாழும் ஒன்று என்பது நிதர்சனம்.சித்திரக் கவிசித்திரக் கவி அனைத்துப் பொருளும் முழுமையுற உணரும் பரஞானம் வாய்ப்பதற்காக அருளப்பட்டவை சித்திரக் கவிகள் என்பது பெருவழக்கு. பாடுபவரின் மொழிப் புலமை, மொழியின் செழுமை, ஞானம் என்பவற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் படி அமைந்தவை இச்சித்திரக் கவிகள் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

சித்திரக் கவியை விளங்கிக் கொள்ள மொழி ஞானம் வேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் ஒரு படம் போன்றே இருக்கும் (கிறுக்கல் போன்று காணப்படும்). ஆனால், இது பொருள் நிறைந்த படமும் பாடலும் ஆகும். தமிழைத்தவிர பிற மொழிகளில் இக்கவி வடிவம் இல்லை என்பது தமிழர் பெருமை கொள்ளும் விடயம் அல்லவா!!! சித்திரக் கவி ஒன்று எவ்வாறு அமைதல் வேண்டும் எனப் பல தமிழ் இலக்கண நூல்களிலே கூறுப்பட்டுள்ளன. தண்டியலங்காரம், நன்னூல், மாறனலங்காரம் போன்ற இலக்கண நூல்கள் சித்திரக் கவியின் இலக்கணங்களை எடுத்துரைக்கின்றன.

இதற்கமைய பல தமிழ் புலவர்களும் சித்திரக் கவி வடித்துள்ளனர். அதிலும் சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமத்து ‘விசித்திரக் கவி’யை இயற்றியவர் பாம்பன் சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  சித்திரக் கவி வகைகள் சித்திரக் கவியானது இயற்றப்படும் வடிவத்திற்கு ஏற்ப அவை பல பெயர்கள் பெற்று விளங்குகின்றன.

சித்திரக் கவி
சித்திரக் கவி

சதுர பந்தம்  கோமூத்திரி

நாக பந்தம்  சுழி குளம்

இரத பந்தம்  மாலை மாற்று

சஸ்திர பந்தம்  காதை கரப்பு

முரச பந்தம்  வினாவுத்தரம்

மயூர பந்தம்  நீரோட்டம்

கமல பந்தம்  திரிபங்கி

எனப் பலவகை இதில் உள்ளன. இவற்றுக்குரிய இலக்கணங்கள் இலக்கண நூல்களிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

இத்தகு விசித்திரம் பொருந்திய சித்திரக் கவிகளைத் தமிழ் போதிக்கும்

நல்லாசான்கள் நம் தலைமுறைக்குப் போதித்தல் உத்தம செயல் போலும்.

(சித்திரக் கவி பற்றிய மேலும் தகவல்களை மறு பதிவில் காண்போம்)

 

யாம் அறியாத் தமிழ் : சித்திரக் கவி – நிறைவுப் பகுதி

பார்வை நூல்கள்
1. சித்திரக் கவி விளக்கம் – வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி
2. தமிழ் காப்பியங்கள் – ஜகந்நாதன்.சி,வா.

தொகுப்பாக்கம் : இளஞ்சைவப் புலவர். த.கி.ஷர்மிதன்.