யாம் அறியாத் தமிழ் : சித்திரக் கவி – நிறைவுப் பகுதி

சென்ற பதிவில் சித்திரக் கவி பற்றிய அறிமுகக் குறிப்புக்களைப் பார்த்திருந்தோம். இப்பதிவில் மேலும் விளக்கங்களுடன் சித்திரக் கவி பற்றிக் காண்போமா???

அழகு பொருந்திய ரேகை வடிவங்களை வரைந்து அவற்றுள் எழுத்துக்களால் அரிய கவி வடிக்கும் விந்தை மிகு பா வடிவான சித்திரக் கவி தமிழினதும் தமிழரினதும் அளவிட முடியாத அறிவாற்றலைக் காட்டும் அற்புதச் செய்யுள் வடிவமாகும்.

சென்ற பதிவில் சித்திரக் கவிகளின் வகைகள் பற்றிப் பார்த்திருந்தோம்.  அவற்றுக்கான எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. கோமூத்திரி – (கோ – பசு, மூத்திரி – மூத்திர வடிவானது) பசு நடந்து கொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு இதுவாகும். உதாரணமாக:

“பருவ மாகவி தோகன மாலையே
பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசைவி டாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே”

சித்திரக் கவி
கோமூத்திரி

2. கூட சதுர்த்தம் – நான்காம் அடியில் உள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்றடிகள் உள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படுவது இதுவாகும். (கூடம் – மறைவு, சதுர்த்தம் – நான்காவது).

“பாடலின் நாலாம் பதம் பொறி வரியிடைக்
கூடமுற்றதுவே கூட சதுர்த்தம்”
என்கிறது மாறனலங்காரம். எடுத்துக்காட்டு :
“நாதா மானதா தூய தாருளா
ணீதா னாவாசீ ராம னாமனா
போதா சீமானா தரவி ராமா
தாதா தாணீ வாமனா சீதரா”

சித்திரக் கவி
. கூட சதுர்த்தம்

3. சக்கிர பந்தம் – வண்டிச் சக்கரம் போல அமைக்கப்படுத் சித்திரத்திலே சிற்சில இடங்களில் எழுத்துக்கள் பொதுவாக நிற்கும்படி அமையப் பாடிய செய்யுள் இதுவாகும். இதில் நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம் மற்றும் எட்டாரைச் சக்கரம் என மூவகை உள்ளன.

அ) நான்காரைச் சக்கரம்

சித்திரக் கவி

ஆ) ஆறாரைச் சக்கரம்

“தண்மலர் வில்லிதன் போரானமக்குத் தயையளித்த
கண்மலர்க் காவிக் கெதிரா
வனவன்று கைப்பொலிந்த
பண்மலர் யாழ்பயில் வாரார்வு
சேர்பதி நாகைமிக்க
தண்மை யகத்துப் பதுமத்
மாதர் தடங்ங்கண்களே”

இ) எட்டாரைச் சக்கரம்எட்டாரைச் சக்கரம்

“மரல்மலி சோலை யகனலங் கதிர்க்க மடமயி லியற்றக மாதிரம் புதைத்து
வளைந்துபுகன் மேக வல்லிருண் மூழ்க
வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி மன்னுமா மடமொழி வடிவாள் வளவன் கன்னித் துறைவன் கனகச் சிலம்பே”

4.நாக பந்தம் – பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் புணர்ந்து விளையாடுவதைப் போல சித்திரம் வரைந்து, உபதேச முறைப்படி அப்பாம்பு உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வகுத்துச் சந்திகளில்

நின்ற அறைகளிற் பொது4. நாக பந்தம் – பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் புணர்ந்து வாக எழுத்துக்கள் அமைய, ஒரே எண்ணிக்கை கொண்ட எழுத்துக்களாலான கவிகள் பொருத்தப்படுவதாகும். (நாகம் – பாம்பு, பந்தம் – தொடர்பு). இதில் இரட்டை நாக பந்தம், அட்ட நாக பந்தம் என இரு வகை உண்டு.

அ) இரட்டை நாக பந்தம் – வாலில் மூன்று எழுத்தும் தலையில் இரண்டு எழுத்தும் மூலை கண் நான்கும் வயிறு இரண்டும் ஐவைந்தாய், நாலு எட்டு நாலு ஐந்து ஏழாக பாம்பினுள் சீர் அமைத்து அமைப்பது இதுவாகும்.

“அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் தெருளின் மருவாச்சீர்ச் சீரே – பொருவிலாவொன்றே யுமையா ளுடனே யுருத்தரு குன்றே தெருள வருள்”

நாக பந்தம்
நாக பந்தம்

ஆ) அட்ட நாக பந்தம் – இது ஒரு சதுரத்தின் நான்கு பக்கமும் புறத்தில் இவ்விரண்டு பாம்பின் தலைகள் பொருந்த நான்கு கோணங்களிலும் கோணம் ஒன்றில் இவ்விரண்டு வால்கள் பொருந்த எட்டுப் பாம்புகள் பின்னிக் கிடக்க, உபதேச முறைப்படி சித்திரம் வரைந்து, எடுத்துக் கொண்ட கணக்கின்படி எழுத்துக்கள் நிற்ப கவி அமைப்பதாகும்.

5. சுழி குளம் – இது எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா”

 

இந்தச் செய்யுளின் பொருள்:-

கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே;

விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;

முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்;

திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா.

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

சுழி குளம்
சுழி குளம்

இவ்வாறு சித்திரக் கவிகளிலே பிரம்மிக்கத்தக்க பல வடிவங்கள் உண்டு. இவற்றை முழுமையாகக் கற்கும் பொது தமிழின் அருமை பெருமை நன்கு வெளிப்படும். தமிழைக் கீழானதாகக் கருதும் உற்றவரும் மற்றவரும் இத்தகு அரிய தமிழ் சிறப்புக்களை அறிய நேரிடும் போது தமிழின் தனிச் சிறப்புக்b கட்டு மெய்மறப்பர் என்பது திண்ணம். வருங்கால சந்ததியினருக்கு இவ்வாறான அரிய தமிழ் பொக்கிஷங்களைப் போதித்து தமிழை உலகறியச் செய்வது எம் கடனே.

“எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
– மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை

 

தொகுப்பாக்கம் : இளஞ்சைவப் புலவர். த.கி.ஷர்மிதன்.