யானை தாக்கி இதுவரையில் 25 பேர் மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாடுகளை மேய்த்து பட்டியில் கட்டி விட்டு பின்னர் வாகனேரி குளத்தில் குளிப்பதற்காக நேற்று இரவு சென்ற போது குளத்திற்கு வந்த யானையால் தாக்குதலுக்கு இலக்கி குறிப்பிட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்தை தொடர்ந்து வாகனேரி குளத்திற்கு அருகில் காணப்படும் சடலத்திற்கு முன்பாக பொதுமக்கள் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினையும் நேற்று (11) மேற்கொண்டனர்.

இதன்போது நாங்களும் வாழ வேண்டும் வாகனேரி மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும், யானை வேலியை அமைத்து தாருங்கள், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தாருங்கள், வீதி விளக்குகளை அமைத்து தாருங்கள், எத்தனை காலம் இப்படி வாழ்வது எத்தனை உயிர்களை இழந்து விட்டோம் இனியாவது எமது உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.

வாகனேரி பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கி இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு எட்டு மணியளவில் வாகனேரி பிரதேசத்தினுள் யானை நடமாட்டமே காணப்படுவதுடன், மக்களின் நடமாட்டம் எதுவும் இல்லாமல் மக்கள் பயத்தின் மத்தியில் வீட்டினுள்ளேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே யானை தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக உடனடியான யானை வேலி அமைத்து மக்களை காப்பாற்ற உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]