யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு – அனந்தி சசிதரன் !

தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேச சமூகம் யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருப்பதனையே ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்களது மதிப்பீட்டின் அடிப்படையிலான பரிந்துரைகள் உணர்த்தியுள்ளது. அத்துடன் நின்றுவிடாது இதே நிலையில் மேலும் வலுப்பெற்று தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேச சமூகம் துணைநிற்க வேண்டும் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.,

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இரண்டு வாரகாலம் இலங்கையில் தங்கியிருந்து நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ள உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை தொர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் அவர்கள் தனது விஜயத்தினை முடித்து கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும் போது இதுவரை காலமும் தமிழர் தரப்பில் அழுத்தமாக வலியுறுத்திக் கூறப்பட்டு வந்த நிலைக்கு அண்மித்ததாக சர்வதேசத்தின் நிலைப்பாடு வந்திருப்பதாக உணரமுடிகின்றது.

இலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடில் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற்கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. அறிக்கையாளர் யுத்த வெற்றி வீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் தமிழினப்படுகொலை நிகழ்த்திய சிங்கள இராணுவத்தினரை பாதுகாக்க முயலும் அரசின் முயற்சியை மறைமுகமாக கண்டிப்பதாகவே அமைந்துள்ளது.

கால அட்டவணையுடன் கூடிய பரந்துபட்ட மற்றும் சுயாதீனமான நிலைமாறு கால நீதிப்பொறிமுறை ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் சட்டம் சர்வதேச தரங்களைப் பின்பற்றுவதாக அமையவேண்டும். வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற இராணுவப்பிரசன்னத்தை குறைக்க வேண்டும். காணி விடுவிப்பு தொடர்பான நேர அட்டவணை அவசியம். மனித உரிமை காப்பாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சுயாதீன தன்மை வெளிப்படைத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தடயவியல் விசாரணைகளுக்காக உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச உதவிகளைப் பெறலாம். பாதிக்கப்பட்ட மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். என்பன போன்ற பரிந்துரைகளை பப்லோ டி கிரீப் அவர்கள் முன்வைத்துள்ளார்.

இருந்தும் இவை, தமிழர்களுக்கு எதிராக நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் உரிமை மீறல்களுக்கும் உயிர்ப்பறிப்புகளுக்கும் நேரடிக்காரணமானவர்களாக விளங்கிவருபவர்களையும் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே முழுக்கவனம் செலுத்தி வருபவர்களையும் எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றது? வழக்கம் போன்று எதனையுமே ஏற்க மறுக்கும் அரசாங்கம் இவரது பரிந்துரைகளையும் ஏற்க மாட்டோம் என்றும் அது எவ்வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என்றும் கூறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு கிடைத்த ஆதாரங்களின்படி நான் அவதானிப்புக்களை செய்கிறேன். அரசியல் எதிர்பார்ப்பு மிக அவசியமாகின்றது. ஆனால் ஐக்கிய நாடுகளின் நிபுணர் என்ற அடிப்படையில் எனது பரிந்துரைகள் சட்டரீதியான பின்னிணைப்பைக் கொண்டவையல்ல என்று பதிலளித்துள்ளதன் மூலம் மேற்குறித்த வினா தமிழ் மக்களின் மனங்களில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

ஐ.நா. அறிக்கையாளர் கண்டுணர்ந்துள்ள இவ்விடயங்களைத்தான் தமிழர் தரப்பில் இருந்து இத்தனை ஆண்டுகளாக வலியுத்தப்பட்டு வருகின்றது. அதை மீறியே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்ககை அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டதுடன் குற்றவாளிகள் தம்மைத் தாமே விசாரிக்கும் விதத்தில் அதுவும் வலுவிழந்த உள்நாட்டு பொறிமுறைக்குள் விசாரணைகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போதைய பரிந்துரைகள் இலங்கை அரசின் மீதான நம்பகத்தன்மையினை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைந்துள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டம், நல்லிணக்க பொறிமுறைக்கான ஆலோசனகளை முன்னெடுப்பதற்கான செயலணி உருவாக்கம் மற்றும் அந்த செயலணியால் முன்வைக்கப்பட்ட அறிக்கை, காணாமல்போனோர் தொடர்பான அலுவ-லகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் இவ் ஆணைக்குழுவிற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை போன்றவற்றை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்களாக ஐ.நா. விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அமைந்துள்ளது.

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரே நோக்கில் இலங்கை அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான கண்துடைப்பு நடவடிக்கைகளை சிறந்த முன்னேன்றமாக சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் ஏற்று அங்கீகரித்திருந்தமையே பொறுப்புக் கூறலில் இருந்து ஒவ்வொரு முறையும் இலங்கை அரசாங்கம் தப்பித்து வருவதற்கும் உரிய நீதியை தமிழர்களுக்கு வழங்காதுவிடுவதற்கும் ஊக்குவிப்பாக அமைந்திருந்தது. தற்போதும் இவ்வாறான அரைகுறையான விடயங்களை முன்னேற்றமாக எடுத்துக் கொண்டிருப்பதானது இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக் கூறவைப்பதற்குப் பதிலாக தந்திரத்தனமான செயற்பாடுகளின் மூலம் காலத்தை இழுத்தடித்து அனைவரையும் ஏமாற்றுவதற்கே வழிகோலும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இத்தனை ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் கூறிவந்த விடயங்களை ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் கூறியுள்ளதன் மூலம் எமது நிலைப்பாட்டிற்கு அண்மித்ததாக சர்வதேசம் வந்திருப்பதையே காட்டுகின்றது. இது, நீதிக்காக ஓயாது போராடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதே நிலையில் மேலும் வலுப்பெற்று தமிழர்களுக்கு உரிய நீதி கிடைத்திட சர்வதேசம் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். அத்துடன் நீதிக்கான எமது போராட்டங்களைத் தொடர்வதன் மூலமே அந்த நிலை நோக்கியதாக சர்வதேசத்தை உந்தித்தள்ள முடியும் என்பதால் எமக்கான நீதி கிடைக்கும் வரை உறுதியுடன் தொடர்ந்து போராடுவது தமிழர்களாகிய எமது கடமையாகும். இவ்வாறு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]