மோடி இ.தொ.காவின் அழைப்பின்பேரிலேயே மலையகம் வருகிறார் : செந்தில் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பு மற்றும் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதுவரின் பிரயத்தனங்களாலும் பிரதமர் மோடி மலையகத்துக்கான விஜயத்தினை மேற்கொள்வார். அவருக்கான மகத்துவம் மிக்க வரவேற்பினை வழங்குவதற்கு எமது மக்கள் காத்திருக்கின்றனர். அத்துடன், ஏற்பாடுகளின் வழிகாட்டியாய் திகழும் இந்தியத் தூதுவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தொடர்பிலேயே கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

சர்வதேச நாடுகளின் சிறந்த அரச தலைவர்களின் பட்டியலில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி முதலிடத்தை பிடித்துக் கொண்டுள்ளதுடன் தனக்கான தனியான இடத்தினையும் பதிவாக்கிக் கொண்டுள்ளார்.

குறிப்பிட்டு அல்லது உதாரணப்படுத்திக் கூறுவதாயின் அமெரிக்க வல்லரசின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் பார்க்கிலும் அதிகமான மக்கள் செல்வாக்கை கொண்டவர் என்ற கருத்து கணிப்பில் முதல், இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான வாக்குகளையும் பெற்றுக் கொண்டவர் பிரதமர் மோடியாவார். அதனால் அவர் உலகின் எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும் மக்கள் சந்திப்பினை கொள்ளும் போதும் அவரது செல்வாக்கு வெளிப்பட்டு நிற்பதை உணரமுடியும்.

அண்மைக் காலமாக பிரதமர் மோடி மேற்கொண்ட அதிரடி தீர்மானங்கள் துணிச்சல் மிக்க ஆளுமையைக் காட்டியுள்ளது. குறிப்பாக ரூபா நோட்டுக்களின் மாற்றம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றினூடாக போற்றிப் புகழப்படும் தலைவராகத் திகழ்கின்றார்.

பாரதப் பிரதமர் மோடியின் கடத்தமுறை;த இலங்கை விஜயத்தின் போது அவரைச் சந்தித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிளங்கன் வைத்தியசாலையை தாங்களே திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அத்துடன் அவ்வாறு இடம்பெற்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அதே நேரம் மலையக மக்களுக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் ஆகும் என்றும் வலியுறுத்திக் கூறியிருந்தார்.
பிரதமர் மோடியை மலையகத்துக்கு அழைத்து வர வேண்டும் என்பதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளையும் பிரயத்தனங்களையும் கடந்த காலங்களில் மேற்கொண்டது. அது மட்டுமன்றி, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து விடா முயற்சியின் பயனாக பிரதமர் மோடியின் விஜயம் உறுதிபடுத்தப்பட்டது.

அந்த முயற்சிகளும் பிரயத்தனங்களும் வெற்றியளிக்கும் வகையில் இந்தியத் தூதுவர் செயற்பட்டிருப்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அவருக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரதமர் மோடி பல அரச வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்ட போதிலும் இலங்கையில் அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்திருக்கும் மலையக விஜயம் அனைத்தையும் விட சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் முழு மூச்சாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று செயற்படுகின்றது ‘ என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]