மோடியை வலியச் சென்று சந்தித்துப் பேசினார் மஹிந்த

மோடியை வலியச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இறுக்கமான நிகழ்ச்சி நிரலுடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு குறிப்பிட்ட சில தரப்பினரை மாத்திரம் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அந்தச் சந்திப்பு பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு வந்த இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இந்தியத் தூதுவர் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இதற்கமைய, நேற்றுமுன்தினம் பின்னிரவு மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்றது என இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மோடிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இராப் போசன விருந்துபசாரத்தை அடுத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்த மே தினப் பேரணியில், பொது எதிரணியின் தலைவர்களில் ஒருவரான விமல் வீரவன்ச, இந்தியப் பிரதமரின் வருகைக்கு எதிராகக் கறுப்புக்கொடி காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்து 10 நாட்களின் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]