மோடியின் வரலாற்று விஜயம் மாற்றம் காணுமா மலையகம்?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. மலையக மக்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்துகளும் இந்திய வம்சாவளியினர் என்ற அடிப்படையில் மலையக மக்களுக்கு ஒரு புது உணர்வை வழங்கியுள்ளது.

தமிழக மண்ணில் இருந்து இலங்கையில் பெருந்தோட்டங்களில் பொருளாதார நோக்கங்களுக்காக குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுகள் கடந்துள்ள நிலையில், இவர்களுக்கும் இந்தியாவுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்பதை இந்திய பிரதமர் மோடியின் விஜயமே நவீன உலகுக்கு பறைச்சாற்றியுள்ளது.

இந்த மக்கள் தாங்கள் இந்திய வம்சாவளி மக்கள், எமக்கு இந்தியாதான் தொப்புள் கொடி உறவு எனப் பல சந்தர்ப்பங்களில் உறக்கச் சொல்லியுள்ளனர். ஆனால், காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுப்பட்ட இலங்கையில் இவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு துரத்தியடிக்கப்பட்டனர். முன்னாள் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், முன்னாள் இந்திய பிரதமர் லால் பகத்திரி சாஸ்திரியும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இந்த மோசமான செயற்பாட்டை அரங்கேற்றினர்.

என்றாலும், காலம் இவர்களை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. ஆனால், மூன்றில் ஒரு பகுதி மக்கள் சென்றதால் இந்த நாட்டில் சனத்தொகையில் இரண்டாம் நிலையில் இருந்த இவர்கள் 10 இலட்சம் பேர் நாடுகடத்தப்பட்டதால் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தியா வம்சவாளியாக வந்த இவர்களுக்கு இந்தியாவே கரங்கொடுக்க மறுத்ததால் காலப்போக்கில் மலையகத் தமிழர்கள் என்று தமது நாமத்தை மாற்றிக்கொண்டனர். இலங்கைத் தீவில் வரண்டுபோய்கிடந்த மலையக மண்ணை பச்சை பசேலென தேயிலை தேசமாக மாற்றிய இவர்களின் வாழ்வில் பொருளாதார வளர்ச்சி என்பது இன்று எட்டாக்கணியாகவே உள்ளது.

பெருந்தோட்டங்களை அரசு நிர்வகித்தாலும், தனியார் நிர்வகித்தாலும், இரத்தம் சிந்தி உழைத்து இந்நாட்டின் அந்நிய வருமானத்தின் முக்கிய புள்ளியாக இவர்கள் திகழ்ந்தும் இன்னமும் வேலை செய்தால் மாத்திரமே ஒருவேளை உண்ண கூடிய ஒரு இறுக்கமான பொருளாதார நெருக்கடியிலும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.

இந்திய வம்சாவளியினராக மலையக மக்கள் இடம்பெயர்ந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்தும் இன்னமும் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் தருணத்தில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை இங்கு வீழ்ந்துள்ளது.

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹிம்சாவதி மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இது அரசியல் ரீதியான பயணமல்ல. மூன்று வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்த காந்தி கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தார்.

ஹட்டன், காசல்ரீ சமர்வில் தோட்டத்திலுள்ள செட்டியார் ஒருவரின் பங்களாவிலேயே ஹட்டன் பயணத்தின்போது காந்தி தங்கியிருந்தார். குறித்த ஆடம்பர பங்களா தற்போது சமர்வில் தமிழ் வித்தியாலயமாக இருக்கின்றது. 1931ஆம் ஆண்டு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர் நேரு நுவரெலியாவில் ஒரு நாள் தங்கியிருந்தார்.

பின்னர் 1939 ஆம் ஆண்டு காந்தியின் கோரிக்கையின் பிரகாரம் மலையகத்துக்கு நேரு வந்திருந்தார். அக்காலப் பகுதியில் இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனைச் சமாளிப்பதற்கு எதிர்கொள்வதற்கு பலமானதொரு கட்டமைப்பு அவசியமாகியிருந்தது. அதனை அமைக்கும் நோக்கிலேயே நேரு வந்திருந்தார்.

ஹட்டன், டன்பார்க் மைதானத்தில் காந்திரமானதொரு உரையை நேரு நிகழ்த்தினார். இதையடுத்து 1939 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உதயமாகியது. அதுவே சுதந்திரத்தின் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறியது.

1954 இல் காங்கிரஸுக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் அஸில் பிரிந்து சென்று ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார். அதன்பின்னர் ஸி.வி.வேலுப்பிள்ளையும் பிரிந்து சென்று தொழிலாளர் தேசிய
சங்கத்தை உருவாக்கினார்.

பின்னர் 1957ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி தனது மகள் இந்திராவுடன் நேரு இலங்கை வந்திருந்தார். அது அரசியல் ரீதியான பயணம் அல்ல. புத்த ஜயந்தியின் 2500 ஆண்டைக் கொண்டாடும் வகையிலேயே இலங்கை அரசின் அழைப்பின்பேரில் அவர் வந்திருந்தார். இதன்போது அநுராதபுரத்துக்கு ரயிலில் சென்ற அவர், ஜயந்தி மாவத்தை எனும் புதிய நகரையும் ஆரம்பித்து வைத்தார்.

1987 காலப்பகுதியில் அப்போதைய இந்தியப் பிரதமர் இலங்கை வந்திருந்தாலும் அவர் மலையகத்துக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே அவரது பயணம் இடம்பெற்றது.

இவ்வாறு இந்தியாவுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் மற்றும் புரிந்துணர்வு உறவுகள் ஒரு மெத்தனப் போக்கிலேயே காலங்காலமாகத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது மோடியும் விஜயம் செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால் என்ன மாற்றம் நிகழப் போகின்றது என்று மலையக புத்திஜீவிகள் ஒருபுறத்தில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மோடியின் வருகையால் மலையக மக்களுக்கு ஒன்றும் நடைபெற போவதில்லை என்று சில பிரதிவாதங்கள் அவரின் விஜயத்திற்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தாலும். அவரின் விஜயத்தின் பின்னர் மலையக மக்களிடையே ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. அவர் முன்னைய இந்திய பிரதமர்கள் போல் அல்லாமல் மலையக மக்கள் மீதும் இந்தியாவின் தொப்புள் கொடி மீதும் இந்திய எப்போதும் அக்கறையுடன் செயற்படும் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தார்.

அதேபோல் மலையக மக்களும் இந்தியா வம்சாவளியினர்தான் என்ற செய்தி இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் சென்றுவிட்டது. எனவே, இந்த மக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பலர் பேசுவதற்கு மோடியின் விஜயம் வழிசமைத்துள்ளது என்பதே நிதர்சனம். இனிவருங்காலங்களில் இந்தியாவை ஆழப் போகும் அரசுக்கும் இவரின் விஜயம் ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

மோடியின் விஜயத்தின் போது பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டார். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் தனித் தனியாக கலந்துரையாடியிருந்தார். முக்கியமாக
அவரின் உரையில் கூட மலையகத்தில் பிறந்து இந்தியாவில் மக்கள் திலமாக போற்றப்பட்ட எம்.ஜி.ஆரையும் நினைவுப்படுத்தியிருந்தார்.

அத்துடன், மலையக மக்களின் விடியலுக்காய் இரும்புக் கரங்கொண்டு செயற்பட்ட அமரர் சௌமிய மூர்த்தி தொண்டான், மலையத் தமிழராகப் பிறந்த உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் போன்றோறையும் பெருமைப்படுத்தி பேசியிருந்தார்.

மோடியின் விஜயத்திற்கு முன்பு இவர் நன்கு மலையக மக்கள் தொடர்பில் ஆராய்ந்து வந்ததையால் மலையகத் தமிழர்களை உணர்ச்சிக்கடலில் பொங்க வைக்கும் வகையில் தமிழிலும் பேசியிருந்தார். இந்தியாவில் தமிழில் பேசாத மோடி மலையகத்தில் தமிழில் பேசி உண்மையிலேயே வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.

அதேபோல் மலையக மக்களின் பொருளாதார மற்றும் சுகாதார, கல்வி நலனுக்கான பல வேலைத்திட்டங்களை செய்ய எண்ணியுள்ளதாகவும் உறுதியளித்திருந்தார். அதில் முக்கியமான விடயம் தற்போது இந்திய அரசால் மலையகத்தில் கட்டப்பட்டுவரும் 4ஆயிரம் வீடுகளுடன் சேர்த்து மேலும் 10ஆயிரம் வீடுகளை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

இரண்டு நூற்றாண்டுகாலம் தனிவீடுகளில் வாழும் கனவுடன் வாழ்ந்துவரும் இந்த மக்
களுக்கு 10ஆயிரம் வீடுகள் இந்திய அரசால் வழங்கபடுமாயின் அதற்கு இருகரம்கூப்பி நன்றித் தெரிவிப்பதில் பிழையோதும் இல்லை. கிங்கன் வைத்தியசாலை என்பதும் மலையக மக்களுக்கு கிடைத்த ஒரு வரம்தான். இலங்கையில் ஏனைய பகுதிகள் போன்று மலையகத்தில் நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலை என்பது வெறும் பேசு பொருளாகவே இருந்தது. ஆனால், இன்று அது நனவாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதார தேவைக்கு இந்த வைத்தியசாலை மூலம் ஏதோ ஒருவழியில் குரப்பிட்ட அளவு தீர்வு கிடைக்கப் போகிறது. தோட்ட வைத்தியசாலைகளில் பெரும் சிறமத்தில் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொண்டுவந்த டிக்கோயா, நோர்வூட் பிரதேசங்களை அண்டிய மக்களுக்கு ஒரு பயன்தரும் விடயமாக இந்த வைத்திய சாலை அமைந்துள்ளது.

மோடியுடனான சந்திப்பின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மலையகத்துக்கு தனிப் பல்கலைகழகம் அல்லது பல்கலைகழக கல்லூரியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளனர். இதற்கு செவிசாய்த்துள்ள அவர் ஆவணங்களை தயாரித்து அனுப்பு மாறும் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக இருதரப்பும் தெரிவித்துள்ளன.
இவைபோன்றே த.மு.கூ. மற்றும்.

இ.தொ.கா. முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக மோடி உறுதியளித்துள்ளார். மோடியின் விஜயம் மலையக மக்களுக்கு ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை தமது தாய் நிலமாக மலையகத் தமிழர்கள் ஏற்று வாழ்ந்தாலும் இவர்களின் கலாசாரமும்,வாழ்வியல் முறைமையும் தமிழகத்தை அச்சொட்டாக பிரதிபலிக்கிறது.

இந்தியா என்பது எப்போதும் மலையக தமிழர்கள் விடயத்தில் அக்கரையுடன் செயற்பட வேண்டும் என்பதே நூற்றாண்டு கால ஏக்கமாக மலையகத் தமிழர்களுக்கு உள்ளது. ஆனால், இந்தியாவின் மத்தியில் ஆளும் அரசுகள் மலையகத் தமிழர்களாக இருந்தாலும் சரி வடக்கு, கிழக்குத் தமிழர்களாக இருந்தாலும் சரி ஒரு நேரடியான நிலைப்பாட்டை எடுக்க தவறிவிடுகின்றன.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்ட போதும் நத்திகடல் இரத்தக்கடலாக காட்சியளிக்க பாட்டபோதும் இந்தியாவின் மௌனம் தமிழர்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைத்துவிட்டது. வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு இந்திய பெரும் தேசம்தான். இதனை எப்போதும் நினைவில் இந்தியாவை ஆளும் அரசுகள் அறிந்து செயற்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

வரலாற்றை மாற்றியமைத்துள்ள மோடியின் மலையக விஜயத்தின் பின்னராவது மலையகத் தமிழர்களின் விடயத்தில் இந்தியா தொடர்ந்து அக்கறை காட்ட வேண்டும். அதற்கான உறவு பாலத்தை முரண்போக்கு அரசியலால் மலையகத் தலைமைகள் சிதைத்துவிடாமல் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கு நிகராக சமவுரிமையுடன் வாழ மலையகத் தமிழர்களுக்கு ஒரு திடமான அரசியல் அடித்தளத்தை தற்போதைய அரசியல் தலைமைகள் இடவேண்டும். இரண்டு நூற்றாண்டுகள் உரிமையற்ற சமூகமாகவும், வறுமைச் சமூகாகவும் வாழ்ந்துவிட்ட மலையகத் தமிழர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டின் கால் பகுதியில் இருந்தாவது சுயநிர்ணயத்துடன், ஏனைய சமூகங்களுக்கு இணையாக பொருளாதாரத்திலும், கல்வியிலும், உரிமைகளிலும் மேலோங்க தற்போதைய அரசியல் தலைமைகள் வழிசமைக்க வேண்டும் என்பதே மோடியின் விஜயத்தில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தியாகவுள்ளது.

ஊடகவியலாளர் : சு.நிஷாந்தன்