மோடியின் மலையக விஜயம் இந்திய வம்சாவளியினருக்கு கிடைத்த கௌரவம்

மோடியின் மலையக விஜயம் இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளான ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கு கிடைத்த கௌரவமும் வரப்பிரசாதமுமாகும். வரலாற்றுப் பதிவை நிகழ்த்திய அவருக்கு மலையக உறவுகள் சார்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன், மலையகத்தின் தந்தையான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானை நினைவூட்டியதன் காரணத்தால் அவர் மறைந்தாலும் மக்களின் மனதில் வாழ்கின்றார் என்பதை முழு உலகுக்கும் பறைசாற்றிவிட்டார் என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் மலையக விஜயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மோடியின் மலையகத்துக்கான விஜயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கௌரவமாகக் கருதுகிறது. அதுமாத்திரமின்றி மலையகத்தின் எதிர்காலத்துக்கான வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்று கூறினாலும் அதில் மிகையில்லை.

இலங்கையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை ஸ்தாபிக்கும் பொருட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜவர்கலால் நேரு அதனைத்தொடர்ந்து தேசபிதா மகாத்மா காந்தி ஆகியோரின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் அமைந்திருந்ததன் மூலம் அவர் உயர்ந்த ஸ்தானத்துக்கே சென்றுவிட்டார்.

பிரதமராகக் பதவியேற்றதன் பின்னர் அவர் உலகின் எத்தனை நாடுகளுக்கு பயணித்திருந்தாலும் இலங்கையிலே அதுவும் மலையகத்திலே வாழும் இந்திய தொப்புள்கொடி உறவுகளால் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் அன்பும் அதேநேரம் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினரின் ஆதரவும் அவரது வாழ்நாளில் மறக்க முடியாதவை ஆகும்.

இந்திய நாட்டு உறவுகளாக மலையகத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டு மலையகத்துக்கு வருகை தந்தமைக்காக பிரதமர் மோடிக்கு மலையக சொந்தங்கள் சார்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அமைச்சர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட கிளங்கன் வைத்தியசாலை இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரது தலைமையில் திறந்து வைக்கப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.

பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் மலையகத்துக்கு நான்காயிரம் வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் எமது வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பத்தாயிரம் வீடுகளை மலையக மக்களுக்காக இந்தியா வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பானது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மோடியுடனான சந்திப்பின் போது மலையக உறவுகளின் நலன்சார்ந்த செயற்றிட்டங்கள் அடங்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எமது கோரிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை தரும் கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]