மோசடி முகவர்களாக செயற்படுவோரை கைதுசெய்ய நடவடிக்கை – அமைச்சர் தலதா அத்துகோரல

வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறையில் முகவர்களாக தம்மை அறிமுகம்செய்துகொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இத்தகைய நபர்கள் முறைகேடான வழிகளில் இலங்கை பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இதன் காரணமாக இலங்கை பணிப்பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறதென்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் ‘ஷ்ரம சுரெக்கும்’ என்ற நடமாடும் சேவையைஆரம்பித்து வைத்து அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.

வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்று பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட இலங்கை தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் நோக்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த ஷ்ரம சுரெக்கும் வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு பிரதேச செயலாளர் அலுவலகங்களில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரிகளை சார்ந்தாகும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் தலதா அத்துகொரல மேலும் தெரிவித்தார்.