மொஹமட் கைபின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிரமாக போராடி வரும் தமிழக மக்களி்ன் போராட்ட குணம் மெய்சிலிர்க்க வைப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஹமட் கைப் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கலையொட்டி நிச்சயமாக நடக்கும் என நம்பியிருந்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து அரசியல், சாதி, மொழி, மதங்களைக் கடந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை ஆதரித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் அலங்காநல்லூரில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் அமைதிவழி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் ஆதரவு வேகமாக பெருகி வருகிறது. தமிழ் மக்களின் தீவிரமான போராட்ட குணம் மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஹமட் கைப் டுவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் போராட்டம் ஜனநாயகத்திற்கு சிறந்த உதாரணம் என்று ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.