மொழி மேம்பாட்டு தர வட்டத்தினை நிறுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

தேசிய ஒருமைப்பாட்டு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மொழி மேம்பாட்டு தர வட்டத்தினை நிறுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற மொழி மேம்பாட்டு தர வட்டத்தினை நிறுவுதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்திய ஆகிய ஐந்து வலயங்களிலிருந்தும் 50 பாடசாலைகளின் மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 மொழி மேம்பாட்டு  மொழி மேம்பாட்டு

இந் நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்.தயாபரன், அரச கரும மொழிகள் ஆணைக்குழு உதவிப் பணிப்பாளர் சிவப்பிரகாசம் மதிவாணன், மொழி உத்தியோகத்தர் பிரதீப் செல்வக்குமார், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், மண்முனை வடக்கு தேசிய உருமைப்பாட்டு மேம்பாட்டு இணைப்பாளர் எஸ்.துஜோகாந்த்,மற்றும், பிரதேச செயலகங்களின் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, பாடசாலை மாணவர்களுக்கும், மொழி கற்பித்தல் ஆசிரியர்களுக்கும் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் செயற்பாடு, அமைச்சின் முன்னெடுப்புக்கள், எதிர்காலத்திட்டங்கள், மும்மொழிப் பயன்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான விளக்கங்களை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சிவப்பிரகாசம் மதிவாணன் வழங்கினார். அத்துடன், பாடசாலை மாணவர்களின் சிங்கள மொழியிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இச் செயலமர்வின் நிறைவில், கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்திய ஆகிய வலயங்களைச் சேர்ந்த 50 பாடசாலை நூலகங்களுக்கும், வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் மும்மொழி அகராதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் மாவட்ட ரீதியில் மும்மொழிப் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில், மொழி மேம்பாட்டு தர வட்டத்தினை நிறுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]