மைத்திரி நாளை ரஷ்யாவுக்கு பயணம் நாளை மறுநாள் புடினை சந்திக்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ரஷ்யா நோக்கி பயணமாகிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடினம் புடினின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்கிறார். நாளை பயணமாகும் ஜனாதிபதி நாளை மறுதினம் 24ஆம் திகதிவரை அங்கு தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளில் கலந்துகொள்ளவுயள்ளார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

40 வருடங்களிற்கு பின்னர் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்காக இலங்கை அரச தலைவருக்கு அழைப்பு கிடைத்துள்ள வகையில் இவ்விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் 1974 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ரஷ்யாவிற்கான விஜயத்திற்குப் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

உலகின் பலமிக்க அரச தலைவர்களுள் ஒருவரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களிடமிருந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கிடைத்த இந்த உத்தியோகபூர்வ அழைப்பானது தற்போதைய அரசின் வெளியுறவுத் தொடர்புகளில் மிக முக்கியமான நிலையாகக் குறிப்பிடலாம்.

இலங்கைக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய பொருளாதார, வர்த்தக, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசார துறைகளுக்குரிய ஒப்பந்தங்கள் பல ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ கலந்துரையாடலின்போது இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன

இலங்கை மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமாகி 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் வியாபார தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்கிறார்.

மிகக் குறைந்த கடன்சுமை மற்றும் வலுவான ஏற்றுமதி வருமானத்தையும் கொண்ட ரஷ்யா உலகில் விசாலமான கனியங்கள் மற்றும் எரிசக்தி உற்பத்திக்கு உரிமை கோருவதுடன், உலகின் 11வது விசாலமான மொத்த தேசிய உற்பத்திப் பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் கலை மற்றும் விஞ்ஞானதுறையில் விசேட பாரம்பரியத்தையும், சிறந்த தொழில்நுட்ப முடிவுப்பொருட்கள் உற்பத்தியையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.

இலங்கைக்கும், சோவியத் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகள் 1956 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியதுடன், தற்போது இரு நாடுகளுக்குமிடையில் சிறப்பான பொருளாதார தொடர்புகள் காணப்படுகின்றன. அவ்வாறே இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சுமார் 17 வீதத்திற்கு ரஷ்யாவில் சந்தை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, சிநேகபூர்வமான மற்றும் நம்பகரமான தொடர்புகளை மேலும் உறுதியாக்கி நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளின் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது இந்த இராஜதந்திர விஜயம் உறுதுணையாக அமையும்.

நாளை ரஷ்யா செல்லும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை மறுதினம் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுகள் நடத்தவுள்ளார்.

இதன் போது நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் வர்த்தக மற்றும் முதலீடுகளை மேலும் ஊக்கவிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அத்துடன், மீன்பிடி, சுற்றுலா, கலாசாரம், கல்வி ஒத்துழைப்பு, விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதியுடன் செல்லவுள்ளார். அத்துடன், அமைச்சர்களான சஹிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க, எஸ்.பி. நாவின்ன உட்பட ஐந்து அமைச்சர்களும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]