மைத்திரி-கோட்டாபயவை கொலைசெய்ய சதித்திட்டம்: குரல் பதிவை ஒப்படைக்க உத்தரவு

மைத்திரி-கோட்டாபயவை கொலைசெய்ய சதித்திட்டம்: குரல் பதிவை ஒப்படைக்க உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குரல் பதிவை ஆய்வுசெய்து ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (புதன்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் லங்கா ஜயரத்ன மேற்குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்தோடு, இருவரது குரல்பதிவுகளையும் ஆய்வுசெய்து, அது அவர்களுடைய குரல்தானா என்பதை உறுதிப்படுத்துமாறும், அதற்காக இரு அதிகாரிகளையும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதற்கான திகதியை அறிவிக்குமாறும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை, விசாரணை முடிவடையும் வரை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் கொலைசெய்துவிட்டு, அதனை திசைதிருப்பும் முயற்சியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதானியும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக டி சில்வா முயற்சித்ததாக, ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்தார்.

தன்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது இவ்விடயம் தெரியவந்ததாகவும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி குறிப்பிட்டு, அது தொடர்பான குரல் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]