மைத்திரிக்கு எதிராக ஐ.நா. தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மைத்திரிக்கு எதிராக ஐ.நா. தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன்போது முன்னரே அறிவிக்கப்பட்டப்படி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளன.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடாவிலிருந்தும் புலம்பெயர் தமிழர்கள் வருகைதரவுள்ளதாகவும் இப்போராட்டத்துக்காக ரொறன்ரோ நகரிலிருந்து விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதி கோரி போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயிரம் கணக்காக தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அத்தோடு இந்த ஆட்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரி உறுதியளித்த நிலையில், கொடுத்த வாக்குறுதியிற்கு அமைய எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]