மைதானத்தில் கதறி அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ- அதிர்ச்சியில் ரசிகர்கள்

போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் மைதானத்தில் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போர்த்துகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணியான ரியல் மாட்ரிடில் இருந்து ஜுவாண்டஸ் அணிக்கு மாறினார்.

இந்நிலையில், ஜுவாண்டஸ் மற்றும் வலென்சியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இது ஜுவாண்டஸ் அணிக்காக ரொனால்டோ விளையாடும் முதல் போட்டி என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டியை எதிர்நோக்கியிருந்தனர்.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரொனால்டோவின் கை வலென்சியா அணி வீரர் முரில்லோவின் தலையில் பட்டது. இதனால் முரில்லோ உடனே ரொனால்டோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரது சக அணி வீரர்களும் சூழ்ந்துகொண்டனர்.

ஆனால், இதனை சரியாக கவனிக்காத களநடுவர், வலென்சியா அணி வீரர்களிடம் பேசிவிட்டு, ரொனால்டோவிற்கு போட்டியை விட்டு உடனடியாக வெளியேறும்படி சிகப்பு அட்டை காட்டினார்.

இது ரொனால்டோ உட்பட மைதானத்தில் குழுமியிருந்த அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ரொனால்டோ மைதானத்தில் அமர்ந்து கதறி அழுதார்.

பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தார். எனினும், ஜுவாண்டஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் 154 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, முதல் முறையாக சிகப்பு அட்டையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]