மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்காது

அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட பணிக்குழாமுக்கு மேலதிகமாக, சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொறுப்பை தாம் ஏற்கமுடியாது என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தப் பொறப்பை நிறுவனத் தலைவர்களும், நிறைவேற்று உத்தியோகத்தர்களும், கணக்காய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அரசாங்கம் கூறியுள்ளது.

நிதி மற்றும் ஊடக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட பணிக்குழாமுக்கு மேலதிகமாக, 7500 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், அரச கம்பனிகள் ஆகியவற்றில் ஊழியர் நம்பிக்கை நிதிய, ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவுகளை வழங்குவதும் நிறுவனப் பிரதானிகளின் பொறுப்பாக இருக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில அரச ஊழியர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 75 ஆயிரத்தைத் தாண்டியிருந்தது.

கடந்த ஆண்டு மாத்திரம் 23 ஆயிரத்திற்கும் மேலான அரச ஊழியர்கள் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

இதேவேளை, அரச துறைசார் நிறைவேற்றுத் தரத்திலான பதவிகளில் பல வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இருந்தும், பதவி உயர்விற்கு தகைமை பெற்ற ஊழியர்கள் இல்லாமை காரணமாக வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]