மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இந்தியா செல்ல நீதிமன்றம் தடை

இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை கல்கிசை நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை சந்தேக நபராக உள்ளடக்க முடியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கல்கிசை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

எனினும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், அவர், ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம், 7ஆம் திகதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அவர் நீதிமன்றத்தை அணுகி, வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரியிருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் பயணத்துக்கு தடை விதிக்குமாறு நேற்றுமுன்தினம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கல்கிசை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.