மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்

இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார்.மூத்த ஒலிபரப்பாளர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

முதலில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றிய பின்னர் தனது ஒலிபரப்புத்துறை வாழ்க்கையை ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார்.

இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய பெண்களில் இவர் மிகவும் பிரபலமானவராக கணிக்கப்படுகின்றார். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் ஒலிபரப்பாளராக அவர் இறுதிவரை திகழ்ந்தார்.

ஒலிபரப்புத்துறைக்கு அப்பால் கொழும்பு தமிழ் சங்கத்தின் துணைத்தலைவராக இவர் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.

இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாக அவரது சகோதரர் தயாபரநாதன் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]